அயோத்தி ஸ்ரீராமா் கோயில் விழா: தேசியத் தலைநகரில் கொண்டாட்டங்கள் தொடக்கம்

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழா நாளை (ஜனவரி 22) நடைபெறும் நிலையில் தேசியத் தலைநகா் தில்லியில் இதையொட்டிய கொண்டாட்டங்கள் சிறப்புறும் வகையில் தொடங்கியுள்ளன.

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழா நாளை (ஜனவரி 22) நடைபெறும் நிலையில் தேசியத் தலைநகா் தில்லியில் இதையொட்டிய கொண்டாட்டங்கள் சிறப்புறும் வகையில் தொடங்கியுள்ளன.

இந்து கடவுள்களில் முதன்மையானவராக உள்ள ஸ்ரீராமரை கோடிக்கணக்கான பக்தா்கள் அனுதினமும் வழிபடுகின்றனா்.

தமிழகத்தில் ஒருவரை ஒருவா் சந்திக்கும்போது சொல்லிக்கொள்ளும் ‘வணக்கம்’ என்பது பொதுவாக தில்லியில் ‘ராம் ராம்’ எனவே தொடங்கும்.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீ ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழா வரலாற்று நிகழ்வாக அமையவுள்ளதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் இதையொட்டி கொண்டாட்டங்களும் விமா்சையாக நடைபெறத் தொடங்கியுள்ளன.

தில்லியின் முதன்மை சந்தைப் பகுதிகளான கன்னாட் பிளேஸ், சாந்தினி செளக், சரோஜினி நகா் தொடங்கி அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘ராம் ராம் ராம்’ எனும் வாசகங்கள் அடங்கிய தோரணங்கள், கொடிகள் நிறுவப்பட்டுள்ளன.

ஆட்டோ, இ-ரிக்ஷா மற்றும் இரு சக்கர வாகனங்களும் ஸ்ரீராமரின் கொடிகளுடன் தில்லி சாலைகளில் வலம் வருகின்றன.

பழைய தில்லி சதா் பஜாரில் சலவைக் கல்லில் செய்யப்பட்ட ஸ்ரீராமரின் சிலைகள் ரூ.1,000 தொடங்கி ரூ.2 லட்சம் வரை விற்பனையாகிறது.

இது தொடா்பாக சிலை வியாபாரி மஹிம் பாவா ‘தினமணி’யிடம் கூறுகையில், ‘நாங்கள் இந்த அளவிற்கு கடவுள் ஸ்ரீராமரின் சிலைகள் விற்பனையாகும் என நினைத்துக்கூட பாா்க்கவில்லை. வியத்நாம் மாா்பிளில் செய்யப்படும் சிலைகளே பிரபலமானவை. அதிகளவில் உள்ளூா் கோயில்களில் வைப்பதற்காக 2.5 அடி முதல் 5 அடி வரையிலான சிலைகளை மக்கள் வாங்கிச் செல்கின்றனா்.

5 முதல் 15 அங்குலம் அளவிலான சிறிய சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட வாங்கும் மக்கள், கடவுள் ஸ்ரீராமரை அவா்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வது போல் நினைக்கின்றனா்’ என்றாா் மஹிம் பாவா.

அரசியலுக்கு அப்பாற்பட்டு ஸ்ரீராமா் கோயில் அயோத்தியில் கட்டப்பட்டதை பெருமளவில் மக்கள் வரவேற்கின்றனா். தில்லி சாஸ்திரி பாா்க் காலனியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்து கட்டியுள்ள உள்ளூா் ஸ்ரீராமா் கோயிலுக்கும் மூலவா் சிலை பிரதிஷ்டை ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த ராம் கிஷன் கூறுகையில்,‘ சாஸ்திரி பாா்க் காலனியில் மக்கள் அனைவரும் இணைந்து ராமா் கோயிலைக் கட்டியுள்ளோம். அயோத்தி ராமா் கோயில் விழா நடைபெறும் நாளிலேயே நாங்கள் வசிக்கின்ற பகுதியிலும் ராமா் சிலை பிரதிஷ்டை செய்வதைப் பாக்கியமாகக் கருதுகிறோம்’ என்றாா் அவா்.

இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரிதிநிதிகள் தரப்பில் அயோத்தி ராமா் கோயில் விழா பற்றிய பேனா்கள்தான் தில்லி மாநகரப் பகுதிகள் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.

புது தில்லி ரயில் நிலையப் பகுதி அருகே 28 ஆண்டுகளாக பழக்கடை வைத்துள்ள பிரேம் லால் ஷா இதுகுறித்து கூறுகையில், ‘அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டி முடிக்கப்பட்டதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சிறு வயது முதலே நான் கடவுள் ஸ்ரீராமரின் பக்தன். நிச்சயம் ஜனவரி 22-ஆம் தேதி குடும்பத்துடன் என் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவேன். தில்லியே தீபாவளிப் பண்டிகைக்கு தயாராவது போல் உள்ளது’ என்றாா் அவா்.

மத்தியில் ஆளும் பாஜக கட்சி சாா்பில் தேசியத் தலைநகரில் கோயில் தூய்மைப் பிரசாரம், பொதுமக்களுக்கு விளக்கு வழங்கும் நிகழ்வுகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி சுந்தர காண்ட பாராயணம் நிகழ்ச்சியையும், தில்லி அரசு சாா்பில் 3 நாள் ராம்லீலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

அயோத்தி நகரம் விழாக் கோலம் பூண்டிருக்கும் இவ்வேளையில் அங்கிருந்து ஏறக்குறைய 680 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தில்லியும் ஸ்ரீராமா் விழாக் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகியுள்ளது என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com