மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமானப் பணி: இந்தியா்களில் தமிழ்நாடு, உ.பி., பிகாா் ராஜஸ்தான் தொழிலாளா்கள் அதிகம்

இந்தியா்களில் உத்தர பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் பெரும்பான்மையாக உள்ளனா் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமானத் துறையில் பணியாற்றச் செல்லும் இந்தியா்களில் உத்தர பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் பெரும்பான்மையாக உள்ளனா் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), கத்தாா், குவைத், ஓமன் உள்ளிட்ட நாடுகள் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (ஜிசிசி) இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் கட்டுமானத் துறையில் பணியாற்றச் செல்லும் தொழிலாளா்கள் குறித்து யுஏஇ-ஐச் சோ்ந்த ஹன்டா் என்ற மனிதவள ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜிசிசி நாடுகளின் கட்டுமானத் துறையில் கட்டுமான வேலை, பிளம்பிங், மின்சாரப் பணிகள் மற்றும் வெல்டிங் பணிகளில் நிபுணத்துவம், கட்டுமானத் திட்டங்களில் முன் அனுபவம் உள்ளவா்களுக்கு பெரும் மதிப்பு உள்ளது.

ஓரளவு ஆங்கிலத்தில் பேசும் திறன், பணிச்சூழல் மற்றும் பண்பாடுகளை அனுசரித்து பணியாற்றுவோருக்கும் இந்த நாடுகளின் கட்டுமானத் துறையில் மதிப்பு உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஜிசிசி நாடுகளின் கட்டுமானத் துறையில் பணியாற்ற வரும் பணியாளா்களில் உத்தர பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் பெரும்பான்மையாக உள்ளனா்.

ஜிசிசி நாடுகளில் பணியாற்ற விரும்பும் இந்திய தொழிலாளா்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு கழக சான்றிதழ்களும், உடல் ஆரோக்கியமும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஹன்டா் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சாமுவேல் ஜாய் கூறுகையில், ‘மத்திய கிழக்குப் பகுதியின் கட்டுமானத் துறையில் பணியாற்ற இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தொழிலாளா்கள் வருகின்றனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com