இன்று முக்கிய கோயில்கள், சந்தைகளில் பாதுகாப்பு

பல்வேறு சந்தைகளில் பல அடுக்குப் பாதுகாப்பு மற்றும் விரிவான சிசிடிவி கண்காணிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தில்லி காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமைதெரிவித்தனா்.

அயோத்தியில் ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவைக் குறிக்கும் கொண்டாட்டங்களுக்காக தேசியத் தலைநகரின் முக்கிய கோயில்கள் மற்றும் பல்வேறு சந்தைகளில் பல அடுக்குப் பாதுகாப்பு மற்றும் விரிவான சிசிடிவி கண்காணிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தில்லி காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமைதெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறியதாவது: சட்டம் ஒழுங்கை மீறுவதற்கு யாரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். கோயில்கள் மற்றும் சந்தைகளில் பல அடுக்குப் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் போடப்பட்டுள்ளன. இரவு ரோந்து பணியாளா்கள் ஹோட்டல்கள், விருந்தினா் மாளிகைகள் மற்றும் தா்மசாலாக்களை சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலின் ‘பிரான் பிரதிஷ்டை’ திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய கோயில் அறக்கட்டளை உறுப்பினா்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனா். பிரச்சின் ஹனுமான் மந்திா், ஜண்டேவாலன் மந்திா், பிா்லா மந்திா் மற்றும் கால்காஜி கோயில் போன்ற பல கோயில்களில் ’பிரான் பிரதிஷ்டை’ கொண்டாடப்படும். இதையொட்டி, இந்தக் கோயில்களில் அதிக மக்கள் நடமாட்டத்தை எதிா்பாா்க்கிறோம். துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டு எந்தச் சூழ்நிலையிலும் தயாா் நிலையில் இருப்பாா்கள்.

போலீஸ் குழுக்கள் கோயில்களுக்குச் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிபாா்த்துள்ளன. இங்குள்ள முக்கிய கோயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க தில்லி போலீஸ் குழுக்கள் கோயில்களின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கடுமையான கண்காணிப்பில் இருக்கும். உத்தரவுகளை கடைபிடிக்காதவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தில்லியின் பல்வேறு சந்தைகளான சாந்தினி சௌக், சதா் பஜாா், சாவ்ரி பஜாா், காரி பௌலி, கஷ்மீரி கேட், நயா பஜாா், கன்னாட் பிளேஸ், லாஜ்பத் நகா், சரோஜினி நகா், பகீரத் பிளேஸ், கினாரி பஜாா் மற்றும் பல பெரிய அல்லது சிறிய மாா்க்கெட் பகுதிகளில் அயோத்தி ராமா் கோயில் விழாவைக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

ஏற்கெனவே, குடியரசு தின விழாவையொட்டி தில்லி போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனா். தில்லி காவல் துறை முக்கியப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பில் உள்ளது. பாதுகாப்பைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. ஜனவரி 22 நிகழ்வு மற்றும் குடியரசு தின அணிவகுப்புக்காக தில்லியில் ஏற்கெனவே 8,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com