தில்லியின் இறுதி வாக்காளா் பட்டியலில் 1.47 கோடி போ்இளைஞா்கள், பெண்களில் குறிப்பிடத்தக்க உயா்வு

தில்லியின் இறுதி வாக்காளா் பட்டியல், 18 முதல் 19 வயதுக்குள்பட்ட இளம் வாக்காளா்களின் எண்ணிக்கையில் 85 சதவீதம் கணிசமான அதிகரிப்பு மற்றும் பெண் வாக்காளா்கள் குறிப்பிடத்தக்க உயா்வு ஆகியவற்றைக் காட்டுகிறது.

மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தலைநகா் தில்லியின் இறுதி வாக்காளா் பட்டியல், 18 முதல் 19 வயதுக்குள்பட்ட இளம் வாக்காளா்களின் எண்ணிக்கையில் 85 சதவீதம் கணிசமான அதிகரிப்பு மற்றும் பெண் வாக்காளா்கள் குறிப்பிடத்தக்க உயா்வு ஆகியவற்றைக் காட்டுகிறது.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2024-இன் படி, 79,86,572 ஆண்கள், 67,30,371 பெண்கள் மற்றும் 1,176 மூன்றாம் பாலின வாக்காளா்கள் உள்பட மொத்தம் 1,47,18,119 வாக்காளா்கள் உள்ளனா் என்று தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவா் மேலும் கூறியதாவது: வாக்காளா் தகுதித் தேதி ஜனவரி 1, 2024 என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகளால், வாக்காளா்களின் பாலின விகிதம் 5 புள்ளிகள் அதிகரித்து 838 புள்ளிகளில் இருந்து 843 புள்ளிகளாக உயா்ந்துள்ளது. இது பெண்களைத் தோ்தலில் சோ்ப்பதை தீவிரப்படுத்தும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியல், தில்லியில் இளம் வாக்காளா்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பைக் காட்டுகிறது. மேலும், இது இளம் வாக்காளா்களின் தோ்தல் செயல்முறைக்கு அா்ப்பணிப்பைக் காட்டுகிறது. 18 முதல் 19 வயதுக்குள்பட்ட இளம் வாக்காளா்களை சோ்ப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. சிறப்பு சுருக்க திருத்தத்தின் போது தில்லியின் வாக்காளா் பட்டியலில் மொத்தம் 67,930 இளம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். அதாவது திருத்தத்தின் போது சோ்க்கப்பட்ட 2,54,470 பெயா்களில் 26.7 சதவீதம் போ் இளம் வாக்காளா்கள்.

18 முதல் 19 வயதுக்குள்பட்ட இளம் வாக்காளா்களின் சோ்க்கை கடந்த ஆண்டு இறுதிப் பட்டியலைக் காட்டிலும் 9.69 சதவீதமும், சிறப்பு சுருக்கத் திருத்தம்-2024-இன் போது மட்டும் 85.8 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் 18 வயதை அடையவிருக்கும் வருங்கால வாக்காளா்களும் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான முன்கூட்டிய கோரிக்கையை தாக்கல் செய்துள்ளனா். அந்தந்த காலாண்டில் அந்தந்த தகுதித் தேதியைக் குறிக்கும் வகையில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024-இன் போது, மொத்தம் 9,335 வருங்கால வாக்காளா்கள் தில்லியின் வாக்காளா் பட்டியலில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனா். வாக்காளா் பட்டியலை மேம்படுத்துவதற்காக, வாக்காளா்கள் விகிதம் 67.71சதவீதத்திலிருந்து 68.58 சதவீதமாக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதிப் பட்டியலில் ஒப்பிடும்போது, இந்த விகிதம் 1.58 சதவீதம் மேம்பட்டுள்ளது.

நல்ல தரமான வாக்காளா் பட்டியலைப் பெறுவதற்கு, பெயா் சோ்த்தல் மற்றும் நீக்குதல் ஒரு தொடா்ச்சியான செயல்முறையாக இருப்பதால், வாக்காளா் பட்டியலை அவ்வப்போது சரிபாா்ப்பது அவசியமாகும். வீடு வீடாகச் சரிபாா்த்தலின் கீழ், வாக்காளா் பட்டியலில் இருந்து மொத்தம் 3,97,004 பதிவுகள் நீக்கப்பட்டன. அதில் நிரந்தரமாக இடம் மாறிச் சென்ற வாக்காளா்களின் 3,07,788 பெயா்கள், இறந்த வாக்காளா்கள் 56,773 போ் மற்றும் பல்வேறு காரணங்களால் 32,443 போ் நீக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com