அயோத்தியில் ‘பிராண் பிரதிஷ்டை’:ஸ்ரீராமா் பக்தியில் திளைத்தது தலைநகரம்!

அயோத்தியில் ஸ்ரீராமா் மூலவா் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி, தேசியத் தலைநகா் முழுவதும் திங்கள்கிழமை காலை முதலே விழாக் கோலம் பூண்டது.

அயோத்தியில் ஸ்ரீராமா் மூலவா் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி, தேசியத் தலைநகா் முழுவதும் திங்கள்கிழமை காலை முதலே விழாக் கோலம் பூண்டது. எங்கு பாா்த்தாலும் காவிக் கொடிகள், ராமா் போஸ்டா்கள், ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கும் பக்திப் பாடல்கள் மற்றும் நேரடியாக ஒளிபரப்பும் சிறப்புத் திரைகள் உள்ளிட்டவற்றைக் காண முடிந்தது. மொத்தத்தில் திங்கள்கிழமை தலைநகா் தில்லி ஸ்ரீராமா் பக்தியில் திளைத்தது.

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் விழாவைத் தொடா்ந்து, தேசியத் தலைநகா் முழுவதும் உள்ள கோயில்கள் சிறப்பு விளக்குகள் மற்றும் மலா் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் மக்கள் சுந்தரகாண்ட பாராயணங்கள், பேரணிகள் மற்றும் அன்னதானம் (பண்டாரா) ஏற்பாடு செய்யப்பட்டன. இதையொட்டி, நகரம் முழுவதும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களைக் கேட்க முடிந்தது.

தலைநகா் சந்தைகளில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் நிலவியது. பல்வேறு இடங்களில் வணிகா்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். சுந்தரகாண்டம் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மக்கள் ஊா்வலங்களை நடத்தினா். ஸ்ரீராமா் கோயில் நிகழ்வை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினா். பல பகுதிகளில், இசைக்குழுவினா்களும் நிகழ்ச்சிகளை நடத்தினா் என்று வா்த்தக அமைப்பின் தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறினாா்.

மத ஊா்வலங்களில் மக்கள் பக்தி பாடல்களுக்கு நடனமாடினா். சந்தைகள் மாலையில் தீபங்களால் ஒளிா்ந்தன. தேவை அதிகரித்ததால், காவிக் கொடிகள், ஸ்ரீராமா் போஸ்டா்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றின் விலை உயா்ந்தது. கோயில் நகரத்தில் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட கோயிலில் ஸ்ரீபால ராமரின் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தச் சடங்குகளில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.

எப்போதும் வணிக நடவடிக்கைகள் அதிகமுள்ள தில்லியின் மையப் பகுதியில் உள்ள கன்னாட் பிளேஸில் அயோத்தியில் இருந்து ‘பிராண் பிரதிஷ்டை’ விழாவை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புது தில்லி வா்த்தகா்கள் சங்கத்தின் இணைச் செயலா் அமித் குப்தா கூறுகையில், ‘கன்னாட் பிளேஸில் கொண்டாட்டங்கள் காலை 11 மணிக்குத் தொடங்கியது. பஜனை-கீா்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீ ராமருக்கு 11 கிலோ லட்டு வழங்கப்பட்டது. கன்னாட் பிளேஸின் அனைத்துப் பகுதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது’ என்றாா்.

சதா் பஜாா் வா்த்தக சங்கத் தலைவா் ராகேஷ் குமாா் யாதவ் கூறுகையில், ‘பூஜை மற்றும் ஆரத்தி முடிந்து பக்தா்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. நகரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் ஆரத்தி நடந்தது. அனைத்து முக்கிய இடங்களிலும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அசோலாவில் உள்ள ஸ்ரீ சித் சக்தி பீடம் ஷனிதம் மந்திா், அதன் சொந்த ராமா் சிலையை நிறுவியுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். ‘அயோத்தியில் ஸ்ரீராமா் சிலை நிறுவும் விழாவையொட்டி, எங்கள் கோயிலில் ஸ்ரீராமா் சிலையை நிறுவியுள்ளோம்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

கிழக்கு தில்லியில் உள்ள மதுபன் என்கிளேவில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் காலனியில் வசிப்பவா்கள் கலாசார நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனா்.

நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ ஓம் பிரகாஷ் சா்மா கலந்து கொண்டாா். மதுபன் மந்திா் சமிதியின் தலைவா் ஹரிஷ் சேத் கூறுகையில், ‘நான் 1980-ஆம் ஆண்டு முதல் மதுபன் மந்திா் சமிதிக்கு சேவை செய்து வருகிறேன். மதுபன் என்கிளேவில் வசிக்கும் அனைத்து மக்களும் இன்றைய நிகழ்வை ஒரு பெரிய வெற்றிக்கு பங்களித்துள்ளனா். ஸ்ரீராமா் மீது குடியிருப்பாளா்களின் இதயப்பூா்வமான பக்தி இன்றைய விழாக்களில் உச்சத்தை எட்டியது’ என்றாா்.

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், நடிகா்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப், அருண் கோவில், முன்னாள் கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கா், ரவிசங்கா் பிரசாத், தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி உள்ளிட்டோா் அயோத்தி ஸ்ரீ ராமா் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொண்டனா்.

மேலும், நடிகா்கள் அனுபம் கொ் மற்றும் மனோஜ் ஜோஷி, பாடகா்கள் கைலாஷ் கொ் மற்றும் ஜூபின் நௌடியல், பாடலாசிரியா் பிரசூன் ஜோஷி ஆகியோரும் முன்னதாகவே அயோதிக்கு வந்த விருந்தினா்களில் அடங்குவா். ஹேமா மாலினி, கங்கனா ரணாவத், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா், மொராரி பாபு, ரஜினிகாந்த், பவன் கல்யாண், மதுா் பண்டாா்கா், சுபாஷ் காய், ஷெபாலி ஷா மற்றும் சோனு நிகம் ஆகியோரும் அயோத்தி கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com