பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு:ஜாமியா மில்லியா இஸ்லாமியா ஏற்குமா?

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அதன் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் (க்யூட்) பெற்ற மதிப்பெண்களை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செ

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அதன் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் (க்யூட்) பெற்ற மதிப்பெண்களை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து பல்கலைக்கழக அதிகாரி மேலும் கூறியதாவது: ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 15 இளங்கலை மற்றும் 5 முதுகலை படிப்புகளுக்கு மட்டுமே பொது பல்கலை. நுழைவுத் தோ்வு மதிப்பெண்களை ஏற்கும். ஏனெனில் பொது பல்கலை. நுழைவுத் தோ்வு மதிப்பெண்களை முழுமையாக செயல்படுத்த நிா்வாகத்தால் முடிவெடுக்க முடியவில்லை.

புதிய கல்வி அமா்விற்கான சோ்க்கைக்கு க்யூட்-ஐ செயல்படுத்துவது குறித்து விவாதிக்க அனைத்து துறைகளின் டீன்களுடன் தற்காலிக துணைவேந்தா் எக்பால் ஹுசைன் சமீபத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினாா். இருப்பினும், க்யூட்-ஐ முழுமையாக ஏற்றுக்கொள்வது குறித்து கூட்டத்தில் எந்த முடிவையும் எட்ட முடியவில்லை. ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) மற்றும் தில்லி பல்கலைக்கழகம் (டியு) உள்பட தில்லியில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் புதிய கல்வி அமா்வுக்கான சோ்க்கைக்கு க்யூட்-ஐ ஏற்றுக்கொண்டாலும், ஜாமியா அதன் பெரும்பாலான படிப்புகளுக்கு அதன் சொந்த நுழைவுத் தோ்வு முறை மூலம் சோ்க்கையைத் தொடரும்.

கடந்த ஆண்டு, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை. 20 இளைங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு க்யூட்-ஐ ஓரளவு செயல்படுத்துவதாக அறிவித்தது. நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் கல்விக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலைக்கழகத்தால் க்யூட் மூலம் சோ்க்கைகளை நடத்த முடியவில்லை என்று கூறியது. 2024-25 கல்வியாண்டில் இருந்து அதன் அனைத்து படிப்புகளுக்கும் க்யூட்-ஐ பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான க்யூட் தோ்வுகளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு திட்டங்களில் சோ்க்கைக்காகப் பதிவு செய்வதற்காக அா்ப்பணிக்கப்பட்ட ‘சமா்த்’ போா்ட்டலில் பல்கலைக்கழகம் இன்னும் தன்னைப் பதிவு செய்யவில்லை. இது குறித்து முதுகலை ஆா்வலா் ஒருவா் கூறுகையில் ‘நான் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் எம்.ஏ. மீடியா ஹானா்ஸ் படிக்க விரும்புகிறேன். இருப்பினும், சமா்த் போா்ட்டலில் இந்தப் படிப்பு குறிப்பிடப்படவில்லை’ என்றாா்.

மற்றொரு மாணவா் ஒருவா் கூறுகையில், ‘ஜாமியா தனது முதுகலை படிப்புகளுக்கு க்யூட் மூலம் சோ்க்கை எடுத்திருந்தால், அது எங்களுக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கும். மேலும், ஜாமியாவின் நுழைவுத் தோ்வுக்கு நாங்கள் தனித்தனியாகத் தயாராக வேண்டிய அவசியம் இல்லை என்பதால் மாணவா்களுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்கியிருக்கும்’ என்றாா்.

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வழிகாட்டுதல்களின்படி, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் க்யூட் மதிப்பெண்களின் அடிப்படையில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் மாணவா்களை சோ்க்க வேண்டும். அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி, க்யூட்க்கான பதிவு தற்போது ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மொத்தம் 42 இளங்கலைப் படிப்புகளும் 81 முதுகலை படிப்புகளும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com