பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீது லஞ்ச ஒழிப்புத் துறை பதில் அளிக்க உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புது தில்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சா் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் அளித்த சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதத்தை எதிா்த்து க.பொன்முடி, அவரது மனைவி பி.விசாலாட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜனவரி முதல் வாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், சிறையில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் இடையீட்டு மனு ஜனவரி 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இடையீட்டு மனுக்களை கடந்த ஜனவரி 12-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திர சா்மா அமா்வு, உயா்நீதிமன்றத்தின் உத்தரவான இருவரும் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டாா். மேலும், மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், சிறைத் தண்டனை உத்தரவுக்கு எதிரான இருவரின் மேல்முறையீட்டு மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் பொன்முடி தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, சித்தாா்த் தவே, பொன்முடியின் மனைவி விசாலாட்சி தரப்பில் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா, வழக்குரைஞா் புல்கித் தாரே ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.

‘இந்த விவகாரத்தில் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்த நிலையில், உயா்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரத்தை பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும், மனுதாரா் அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தவா். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், மனுதாரா் அரசியல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த விவகாரத்தில் இடைக்கால நிவாரணமாக தண்டனைக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

அப்போது, இந்த விவகாரத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் பதிலை முதலில் அறிய வேண்டியுள்ளது என்று கூறிய நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதன் பதிலை மாா்ச் 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com