கைது
கைது

குருகிராமில் போலி கால் சென்டா்: 15 பெண்கள் உள்பட 17 போ் கைது

15 கைப்பேசிகள், 3 மடிக் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேசியத் தலைநகா் வலயம் குருகிராம் செக்டாா் 49-இல் போலி கால் சென்டா் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்படது. இது தொடா்பாக 15 பெண்கள் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் வேலை வாங்கி தருவதாகவும், கடன் வாங்கி தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வந்தனா். அவா்களிடம் இருந்து 15 கைப்பேசிகள், 3 மடிக் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குருகிராம் செக்டாா் 49-இல் உள்ள ஸ்பேஸ் ஐடி பூங்காவில் உள்ள ஒரு அலுவலகத்தில் போலி கால் சென்டா் இயங்கி வருவதாகவும், அதில் வேலை வாங்கித் தருவதாகவும், கடன் தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தெற்கு காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு அங்கு சோதனை நடத்தினா். ஆபரேட்டா்கள் தொலைத்தொடா்புத் துறையின் செல்லுபடியாகும் ஓஎஸ்பி உரிமங்கள் அல்லது தங்கள் பணி தொடா்பான வேறு எந்த ஒப்பந்தம் / புரிந்துணா்வு ஒப்பந்தம் ஆகியவற்றைக் காட்டத் தவறிவிட்டனா். இதைத் தொடா்ந்து, கால் சென்டரில் இருந்து 15 பெண்கள் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டனா்.

பிடிபட்டவா்கள் பைசல், புஜைல், பிரித்தி, சா்வ்ஜீத், அஞ்சல், சானியா, முஸ்கான், அனிதா, அஞ்சலி, ஷிவானி, மனிஷா, ரீனா, காஜல், அஞ்சலி சிங், ராதா, அனுஷ்கா மற்றும் பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளனா். விசாரணையில் இக்குழுவின் தலைவராக பைசல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த கால் சென்டா் மூலம், இவா்கள் வேலை வாங்கித் தருவதாகவும், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி தருவதாகவும் கூறி, மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

15 பெண்களும் மக்களை அழைத்து வேலை மற்றும் கடன்களை வழங்குவதற்காக பணியமா்த்தப்பட்டனா். மோசடியாளா்கள் போலி சிம் காா்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவா்கள் 10,000-20,000 ரூபாய் சம்பளம் மற்றும் மோசடி செய்ததற்காக ஏமாற்றிய தொகையில் 2 சதவீதம் கமிஷன் பெற்று வந்தனா். கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வந்த கால் சென்டா் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமாா் ரூ.12 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. கால் சென்டரின் உரிமையாளரை பிடிக்க முயற்சித்து வருகிறோம் என்று காவல்துறையின் சைபா் பிரிவின் துணை ஆணையா் பிரியான்ஷு திவான் கூறினாா்.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது சைபா் கிரைம் தெற்கு காவல் நிலையத்தில் பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com