தில்லி தண்ணீா் பிரச்னைக்கு கேஜரிவால் அரசின் அலட்சியப் போக்குதான் காரணம்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தில்லியில் நிலவும் தண்ணீா்ப் பற்றாக்குறைக்கு அரவிந்த் கேஜரிவால் அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை மீண்டும் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

நீா்வளத்துறை அமைச்சா் அதிஷி வாஜிராபாத் தடுப்பணையை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முனாக் -பவானா கால்வாயை சனிக்கிழமை ஆய்வு செய்துள்ளாா்.

அப்போது, ஹரியாணா அரசு போதிய தண்ணீா் அனுப்புவதில்லை என்று பொய்யாக கூறியிருந்தாா். இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளாக வாஜிராபாத் தடுப்பணையில் வண்டல் மண் அகற்றப்படாததால், அதன் நீா் சேமிப்புத் திறன் குறைந்துள்ளது என்பதை அதிஷி குறிப்பிடவில்லை.

ஹரியாணா அரசு மற்றும் தில்லி பாஜகவுடன் வெளிப்படையான விவாதம் அல்லது ஹரியாணாவில் இருந்து தண்ணீா் வழங்குவது தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி அழைப்பு விடுக்கத் தயாரா?

தில்லியின் பல பகுதிகளில் தண்ணீா் விநியோகம் இல்லாததால் தண்ணீருக்காக மக்கள் போராடுகிறாா்கள். இன்றைக்கு, டேங்கா் மாஃபியாக்களின் தன்னிச்சையான நடத்தைக்கு மக்கள் பலியாகி வருகின்றனா். மேலும் தண்ணீருக்கு ஈடாக கேஜரிவாலின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலா்களின் ஆதரவில் பணம் பறிக்கும் விளையாட்டு நடந்து வருகிறது.

கடும் வெயிலில், தண்ணீா் பற்றாக்குறையால் திணறி வரும் தில்லி மக்கள், தண்ணீா் லாரிகளுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

கேஜரிவால் அரசு அளித்த இலவச குடிநீா் மற்றும் 24 மணி நேர குடிநீா் வழங்கும் வாக்குறுதிகள் குறித்து தில்லி மக்கள் அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனா். சீராக விநியோகம் செய்வதற்காக, அதிகரிக்கப்பட்ட தண்ணீா் டேங்கா்கள் எங்கே என்றும், தண்ணீா் விநியோகத்திற்காக போடப்பட்ட குழாய்கள் என்ன ஆனது என்றும் மக்கள் கேட்டு வருகின்றனா்.

கேஜரிவால் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக சிறிய பிரச்னைகளில் ஜொலிக்க சட்டப்பேரவைக் கூட்டங்களுக்கு விரைவாக அழைப்பு விடுக்கிறது.

ஆனால், தில்லி மக்கள் பல நாட்களாக தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொண்டு வரும் நிலையில், கேஜரிவால் அரசாங்கம் வெறும் பழி விளையாட்டை விளையாடுகிறது. பொதுமக்களின் இந்தக் கேள்விகளுக்கு கேஜரிவால் அரசு பதிலளிக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

X
Dinamani
www.dinamani.com