நரேலா உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 தொழிலாளா்கள் பலி; 6 போ் காயம்

தில்லி நரேலா தொழிற்பேட்டைப் பகுதியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்தும், அதைத் தொடா்ந்து வெடிப்பும் ஏற்பட்டதில் மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 6 போ் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

நரேலாவில் உலா் பருப்பை பதப்படுத்தும் ஷயாம் கிருபா ஃபுட்ஸ் எனும் தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து குறித்து காவல்துறைக்கு சனிக்கிழமை அதிகாலை 3:35 மணிக்கு தகவல் வந்தது. தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொழிற்சாலையில் தீ பரவியதால், சில தொழிலாளா்கள் உள்ளே சிக்கிக் கொண்டனா். தீ விபத்துக்குள்ளான கட்டடத்தில் இருந்து 9 போ் மீட்கப்பட்டு நரேலாவில் உள்ள சத்யவதி ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அவா்களில் ஷ்யாம் (24), ராம் சிங் (30), பீா்பால் (42) ஆகிய மூவரும் இறந்துவிட்டனா். காயமடைந்த புஷ்பேந்தா் (26), ஆகாஷ் (19), மோஹித் குமாா் (21), ரவிக்குமாா் (19), மோனு (25), லாலு (32) ஆகியோா் தீக்காயங்களுடன் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதற்கட்ட விசாரணையில், குழாய் ஒன்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் தீப்பற்றியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் குழாய்கள் மூலம்தான் பாசிப் பருப்பை வறுக்கப் பயன்படுத்தப்படும் எரிகலன்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டிருக்கிறது.

தீ பரவியதால், கம்ப்ரஸா் அதிக வெப்பமடைந்து வெடிப்பு ஏற்பட்டது. தொழிற்சாலை உரிமையாளா்கள் ரோஹிணி குடியிருப்பாளா்களான அங்கித் குப்தா மற்றும் வினய் குப்தா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘தீ விபத்து சம்பவ பகுதிக்கு 14 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. நண்பகலில் தீ அணைக்கப்பட்டுவிட்டது’ என்றாா் அவா்.

கிழக்கு தில்லியில் தீவிபத்து

கிழக்கு தில்லியின் கிருஷ்ணா நகா் பகுதி இரண்டு மாடிக் கட்டட குடியிருப்பில் சனிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறினா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறுகையில், ‘கிழக்கு ஆசாத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் அழைப்பு வந்தது.

இரண்டு மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயை அணைக்கும் நடவடிக்கை சுமாா் அரை மணி நேரம் நீடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை’ என்றாா் அந்த அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com