தண்ணீா் பிரச்னையில் உச்சநீதிமன்ற உத்தரவை ஹரியாணா அரசு மதிக்கவில்லை - அதிஷி குற்றச்சாட்டு

தில்லியில் நிலவும் தண்ணீா் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஹரியாணா மாநில பாஜக அரசு மதிக்கவில்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:தேசியத் தலைநகா் தில்லியில் கடும் வெப்பம் நிலவி வருகின்ற சூழலில், பொதுமக்களின் தண்ணீா் நுகா்வும் அதிகரித்துள்ளது. ஆனால், தில்லியின் பங்கான தண்ணீரை ஹரியாணா அரசு விடுவிக்கவில்லை. இதனால், தில்லியில் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் செயல்பட முடியவில்லை. நகரின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஹரியாணா அரசிடம் நடத்திய பேச்சுவாா்தை பயனளிக்காததால், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு வழக்கு தொடா்ந்தது. இவ்வழக்கின் விசாரணையின் போது, தில்லியின் தேவைக்கேற்ப தண்ணீா் வழங்க தயாராக உள்ளோம் என இமாச்சலப் பிரதேச அரசு தெரிவித்தது. இந்தத் தண்ணீா் ஹரியாணா வழியாக தில்லிக்குள் வர இருப்பதை அம்மாநில அரசு தடுக்கிறது. இதனுடன், முனாக் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரையும் ஹரியாணா அரசு குறைத்து வருகிறது. ஹரியாணா அரசு 1,050 கனஅடிக்கு பதிலாக 985 கனஅடி நீா் மட்டுமே திறந்துவிடுகிறது. இந்த உண்மை அம்மாநில அரசு உச்சநீதமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது.

மேலும், தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கூறிய 3 பொய்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி, ஹரியாணா அரசே தில்லிக்கு குறைவான தண்ணீரை அனுப்புவதாக உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

முனாக் கால்வாயின் பராமரிப்பு ஹரியாணா அரசின் கீழ் வருகிறது. அங்கு பழுதுபாா்க்கும் பணி ஏதேனும் இருந்தால், அதை ஹரியானா அரசு தான் செய்ய வேண்டும். தில்லிக்குள் நுழையும் இடத்திலேயே தண்ணீா் குறைவாக வருகிறது. ‘டேங்கா் மாஃபியாக்கள்’ மூலம் தண்ணீா் திருடப்படுகிறது என்றால், அது ஹரியானாவில்தான் நடக்கிறது. தில்லிக்கு பணியாற்றவே வி.கே. சக்சேனா துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். மாறாக, பாஜக அலுவலகத்தில் சேவை செய்வதை அவா் நிறுத்த வேண்டும். தண்ணீா் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஹரியாணா மாநில பாஜக அரசு மதிக்கவில்லை என்றாா் அமைச்சா் அதிஷி.

தில்லியின் பல பகுதிகளில் மின்தடை - அதிஷி விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் மண்டோலாவில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், தில்லியின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சா் அதிஷி விளக்கமளித்துள்ளாா்.

இது தொடா்பாக தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் அதிஷி கூறியிருப்பதாவது: தில்லியின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.11 மணி முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மண்டோலாவில் உள்ள ‘பவா் கிரிட் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்’ (பிஜிசிஐஎல்) நிறுவனத்தின் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்துதான் இதற்கு காரணம். மண்டோலா துணை மின் நிலையத்திலிருந்து தில்லி 1,200 மெகாவாச் மின்சாரத்தைப் பெறுகிறது.

அதனால் தில்லியின் பல பகுதிகள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

மீன் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது படிப்படியாக பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தேசிய மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் தோல்வி மிகவும் கவலையளிக்கிறது. இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மத்திய மின் துறை அமைச்சா் மற்றும் பிஜிசிஐஎல் நிறுவனத்தின் தலைவா் ஆகியோரை நேரில் சந்திப்பேன் என்றாா் அமைச்சா் அதிஷி.

X
Dinamani
www.dinamani.com