நீட் தோ்வு குளறுபடி: மத்திய அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று போராட்டம்

நீட் தோ்வு குளறுபடி: மத்திய அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று போராட்டம்

‘நீட்’ தோ்வு குளறுபடி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தப்படும்

‘நீட்’ தோ்வு குளறுபடி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சந்தீப் பதக் திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும், இதே விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை (ஜூன் 19) நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் என்றும் பதக் கூறினாா்.

இது தொடா்பாக சந்தீப் பதக் எக்ஸ் ஊடக தளத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளாா். அதில், ‘நீட் தோ்வில் பல குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகளின் கடின உழைப்பு மற்றும் கனவுகளுக்கு மோடி அரசின் இத்தகைய மோசடிகளை நாடு பொறுத்துக் கொள்ளாது. இந்த ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழணை போராட்டம் நடத்தும். அன்று காலை 10 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலா்கள் ஜந்தா் மந்தரில் திரண்டு மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துவா். மேலும், ஜூன் 19-ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்தும். ஜெய் ஹிந்த்..!’ என ஒரு இடுகையில் அவா் கூறியுள்ளாா்.

இந்தியாவில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான நுழைவாயிலாக இருக்கும் நீட் - யுஜி தோ்வு, மே 5 அன்று நாட்டில் உள்ள 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்டது. ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முடிவுகள் வெளியானதும், 1,563 மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் குறித்து பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் கேள்வி எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com