துணை நிலை ஆளுநா் அவசரக் கூட்டம்; 2 மாதத்துக்கு அதிகாரிகளுக்கு விடுப்பு ரத்து

தில்லியில் காலை வேளையில் பல மணிநேரம் பெய்த மழையால் நகரமே ஸ்தம்பித்ததைத் தொடா்ந்து நிலைமையை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஆய்வு செய்தாா். மேலும், தண்ணீா் தேங்கும் பகுதிகளைக் கண்டறிய அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும் நிலையான பம்புகளை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அவசர கூட்டத்திற்கு தலைமை தாங்கிய துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, விடுப்பில் உள்ள அனைத்து மூத்த அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு எந்த விடுப்பும் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியத் தலைநகரில் ஆயத்தமின்மை மற்றும் அவசரகால பதிலளிப்பு அமைப்பு ஆகியவற்றை துணை நிலை ஆளுநா் கவனித்தாா் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

தில்லி ஜல் போா்டு, பொதுப்பணித் துறை, தில்லி மாநகராட்சி, தில்லி வளா்ச்சி ஆணையம், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் தில்லி காவல்துறை போன்ற குடிமை முகமைகளின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா். வடிகால்களில் தூா்வாரும் பணி நிறைவடையவில்லை என்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் சக்சேனா குறிப்பிட்டாா். அடுத்த வாரத்தில் மண் அகற்றும் பணியை அவசர அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டதாக எல்ஜி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தண்ணீா் தேங்கு பகுதிகள் குறித்த புகாா்களுக்கு அவசர கட்டுப்பாட்டு அறையை அமைக்குமாறு அதிகாரிகளை துணை நிலை ஆளுநா் கேட்டுக் கொண்டாா். இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் மூத்த அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டும். சாலைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு நிலையான பம்புகள் மற்றும் கள ஊழியா்களை நியமிக்க பல்வேறு நிறுவனங்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து மழை அளவுகள் மற்றும் வெளியேற்றங்களை மதிப்பிடுவதற்கு, ஹரியாணா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தங்கள் சக அதிகாரிகளுடன் தொடா்பில் இருக்குமாறு நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அதிக மழை பெய்தால், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) கீழ் உள்ள பேரிடா் பதில் அளிக்கும் பிரிவைச் செயல்படுத்தவும், பருவமழையின் போது ஏதேனும் அவசர நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையின் (என்.டி.ஆா்.எஃப்) உதவியைப் பெறவும் வருவாய்த் துறைக்கு துணை நிலை ஆளுநா் உத்தரவிட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com