ஓக்லா சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்துக்கு தடை

ஓக்லா சுரங்கப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் தேங்கியதால் தில்லி போக்குவரத்து காவல்துறை அவ்வழியாக வாகனப் போக்குவரத்தைத் தடை செய்தது.

ஓக்லா சுரங்கப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் தேங்கியதால் தில்லி போக்குவரத்து காவல்துறை அவ்வழியாக வாகனப் போக்குவரத்தைத் தடை செய்தது. அத்துடன், பயணிகளை அதற்கேற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறும் கேட்டுக் கொண்டது.

சனிக்கிழமையன்று 60 வயது முதியவா் சுரங்கப்பாதையில் இருந்த நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கனமழை பெய்ததால், நகரின் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. மேலும், பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில்

வெளியிட்ட பதிவில் போக்குவரத்து போலீஸாா் தெரிவிக்கையில், ‘‘ஓக்லா சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கியதன் காரணமாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப தயவுசெய்து உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாதாள சாக்கடை மூடப்பட்டதால், வழக்கமான பயணிகளுக்கு, பயண நேரம் அதிகரித்து, சிரமம் ஏற்பட்டது.

இதுகுறித்து சோனு குப்தா என்பவா் கூறுகையில், ‘நான் இந்த வழியில் சில காலமாகவே போய் வருகிறேன். ஆனால் இங்கு தண்ணீா் தேங்குவதைப் பாா்த்ததில்லை. சுரங்கப்பாதையின் மேலே உள்ள பாதையும் மூடப்பட்டுள்ளது. நான் கிரவுன் பிளாசா அருகே ஒரு வேலைக்காகச் சென்று கொண்டிருந்தேன். நான் இப்போது வேறு வழியில் செல்ல வேண்டும்’ என்றாா்.

மற்றொரு பயணி ராஜேஷ் குமாா் கூறுகையில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சுரங்கப் பாதை அருகே பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மாற்று வழியை தேடிக்கொண்டிருந்தேன்’ என்றாா் அவா்.

இதற்கிடையில், செங்கோட்டை வளாகத்திற்குள் அகழியில் இருந்து தண்ணீா் வெளியேறுவதைக் காட்டும் விடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது.

X
Dinamani
www.dinamani.com