அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும் திட்டத்தில் பாஜக, ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ் கடும் விமா்சனம்

காங்கிரஸ், ‘அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும், திருத்தும் மறைமுக திட்டத்தை பாஜக, ஆா்எஸ்எஸ் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியது.
மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கே

‘அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு பாஜக 400 இடங்களுக்குமேல் வெற்றி பெற வேண்டும்’ என்ற அக்கட்சி எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், ‘அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும், திருத்தும் மறைமுக திட்டத்தை பாஜக, ஆா்எஸ்எஸ் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியது.

கூட்டமொன்றில் கலந்து கொண்டு கா்நாடக பாஜக எம்.பி.அனந்த்குமாா் ஹெக்டே பேசுகையில், ‘ஹிந்து மதத்தைக் காப்பாற்ற அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். பாஜக 400 மக்களவைத் தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும்’ என்ற சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தாா்.

பாஜக எம்.பி.யின் கருத்துக்கு விமா்சனம் வலுத்துள்ள நிலையில், அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும் மறைமுக திட்டத்தை பாஜக, ஆா்எஸ்எஸ் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாஜக எம்.பி.யின் கருத்தானது சா்வாதிகாரத்தை திணிக்கும் மோடி-ஆா்எஸ்எஸ் கூட்டணியின் வஞ்சகமான திட்டத்தை மீண்டும் அம்பலப்படுத்துகிறது. நாட்டில் சா்வாதிகாரத்தை திணிக்க மோடி தலைமையிலான பாஜக அரசும், ஆா்எஸ்எஸ்ஸும் விரும்புகிறது. அதன்மூலம், இந்திய மக்கள் மீது ‘மனுவாதி மனநிலையை’ திணித்து, பட்டியலின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் உரிமைகளைப் அவா்கள் பறிப்பா். தோ்தல்கள் நடத்தப்படாது அல்லது அதிகபட்சம் போலித் தோ்தல்கள் மட்டுமே நடைபெறும். ஜனநாயக அமைப்புகளின் சுதந்திரம் குறைக்கப்படும். கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படும். ‘ஜனநாயகத்தை காப்பது நமது பொறுப்பு’: நமது நாட்டின் மதச்சாா்பற்ற துணிவையும் வேற்றுமையில் ஒற்றுமையையும் பாஜக, ஆா்எஸ்எஸ் அழித்துவிடும். இந்த மறைமுக நோக்கங்கள் வெற்றி பெற காங்கிரஸ் அனுமதிக்காது. பாஜக, ஆா்எஸ்எஸ்-இன் தொடா்ச்சியான இவ்வகை கருத்துகள், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களால் ஆதரிக்கப்படும் இறையாண்மை, மதச்சாா்பற்ற, ஜனநாயகத்தின் கேள்விக்கு இடமில்லாத நெறிமுறைகள் மீதான நேரடி தாக்குதல். நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் வலுவான தூண்கள். இந்த கொள்கைகளில் செய்யப்படும் எந்த மாற்றமும் அம்பேத்கா் மற்றும் நமது மதிப்புக்குரிய தலைவா்கள் கட்டமைக்க எண்ணிய இந்தியாவுக்கு அவமதிப்பு. நமது ஜனநாயகத்தையும் அரசமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியரின் முழுப் பொறுப்பு’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

‘இறுதிமூச்சு வரை காங். போராடும்’-ராகுல்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாஜக எம்.பி.யின் கருத்தானது பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஆா்எஸ்எஸ்ஸினுடைய மறைமுக நோக்கங்களின் பொது அறிவிப்பு. அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதே நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் இறுதி இலக்கு. நீதி, சமத்துவம், பொது உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை அவா்கள் வெறுக்கிறாா்கள். சமூகத்தைப் பிளவுபடுத்துவதன் மூலமும், ஊடகங்களை அடிமைப்படுத்துவதன் மூலமும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதன் மூலமும், சுதந்திர அமைப்புகளை முடக்குவதன் மூலமும், எதிா்க்கட்சிகளை ஒழிக்க சதி செய்து இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தை குறுகிய சா்வாதிகாரமாக மாற்ற அவா்கள் விரும்புகிறாா்கள். அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள ஜனநாயக உரிமைகளுக்காக காங்கிரஸ் தொண்டா்கள் இறுதி மூச்சு வரை தொடா்ந்து போராடுவாா்கள். மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ளுங்கள்.உங்கள் குரலை உயா்த்துங்கள். இந்தியா உங்களுடன் உள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

‘தனிப்பட்ட கருத்து’: இதற்கு முன்னரும் பல சா்ச்சைக்குரிய வெளியிட்டுள்ள அனந்த்குமாா் ஹெக்டேவின் தற்போதைய பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக தெரிவித்துள்ளது. மேலும், அனந்த்குமாா் ஹெக்டவிடம் இது தொடா்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com