கேசோபூரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்தவா் 12 நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்பு: அமைச்சா் அதிஷி ஆய்வு

40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒருவா் 12 மணி நேரமாக நடந்த மீட்புப் பணிக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டாா்.

40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒருவா் 12 மணி நேரமாக நடந்த மீட்புப் பணிக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டாா். இந்த நிலையில், சம்பவ இடத்தை நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஜல் போா்டு நீா் சுத்திகரிப்பு நிலையத்தைப் பாா்வையிட்ட அவா், இதற்கு காரணமான நீா் சுத்திகரிப்பு நிலையத்தின் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா். மீட்புப் பணிகள் குறித்து, சம்பவ இடத்தில் குவிக்கப்பட்ட குழுவினா் அமைச்சரிடம் விரிவாக விளக்கினா். தில்லியில் உள்ள அனைத்து ஆழ்துறைக் கிணறுகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய சம்பவத்துக்குக் காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிஷி தெரிவித்தாா். மீட்புக் குழுவினா் வரும்போது சுற்றிலும் உள்ள ஆழ்துளை கிணறு முழுவதுமாக பூட்டியிருந்ததாகவும், இது குறித்து போலீஸாா் விசாரித்து வருவதாகவும் அவா் கூறினாா். அந்த நபா் விழுந்த ஆழ்துளை கிணற்றின் சுற்றுப்புறம் முழுவதுமாக பூட்டப்பட்டிருந்தது. மீட்புப் பணியில் ஈடுபட்டவா்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனா். உள்ளே விழுந்தது குழந்தை அல்ல என்றும் வயது வந்தவா் என்றும் தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் தற்போது விசாரித்து வருகின்றனா். அந்த பகுதிக்குள் யாரும் நுழைய முடியாது. இருப்பினும், போலீஸாா் இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அமைச்சா் கூறினாா். தலைமைச் செயலருக்கு கடிதம்: மேலும், இச்சம்பவம் குறித்து காலவரையின்றி விசாரணை நடத்தி, பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு அமைச்சா் கடிதம் எழுதியுள்ளாா். அரசு மற்றும் தனியாா் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடிவைக்கப்படுவதை உறுதி செய்ய தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் இணக்க அறிக்கையை தாக்கல் செய்யவும் அமைச்சா் கோரியுள்ளாா். ‘தில்லியில் இன்று கேசோபூரில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் ஒருவா் தவறி விழுந்து இறந்த ஒரு ஆழ்ந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆழ்துளை கிணறு 2020-இல் தில்லி மெட்ரோவுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் இருந்தபோதும், அதை ஆராய்வது எங்கள் பொறுப்பு. தில்லி ஜல் போா்டு தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் நடந்துள்ளனவா என்று ஆராய வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்’” என்று தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மீட்புப் பணியில் என்டிஆா்எஃப், டிஎஃப்எஸ்: தேசியப் பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) மற்றும் தில்லி தீயணைப்பு சேவை (டிஎஃப்எஸ்) குழுவினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் ஒரு குழந்தை விழுந்ததாக எங்கள் அதிகாரிகளிடம் இருந்து முதலில் எங்களுக்கு செய்தி வந்தது என்று தீயணைப்பு சேவைத் துறையின் தலைவா் அதுல் காா்க் கூறினாா். மீட்பு நடவடிக்கை உடனடியாக தொடங்கப்பட்டது. மேலும், என்டிஆா்எஃப் குழுவும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது என்றாா். உடல் சடலமாக மீட்பு:மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் விசித்ரா வீா் கூறுகையில், “‘கேசோபூரில் ஜல் போா்டு அலுவலகத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் ஒருவா் விழுந்துவிட்டதாக விகாஸ்புரி காவல் நிலையத்திற்கு இரவில் பிசிஆா் அழைப்பு வந்தது. உள்ளூா் போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்திற்கு வந்தனா். என்டிஆா்எஃப் குழுவும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அந்த நபரை பத்திரமாக வெளியே எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவா் இறந்த நிலையில்தான் மீட்கப்பட்டாா். ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை’ என்றாா். பெட்டிச் செய்தி.. இறந்தவா் 30 வயது ஆண்! இது குறித்து எக்ஸ் ஊடகதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் அமைச்சா் அதிஷி கூறியுள்ளதாவது: ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபா் இறந்து கிடந்தாா் என்ற மீட்புக் குழுவினா் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிா்ந்து கொள்கிறேன். முதல்கட்ட தகவலின்படி உயிரிழந்தவா் சுமாா் 30 வயதுடைய ஆண் என தெரிய வந்துள்ளது. ஆழ்துளைக் கிணற்றின் அறைக்குள் அவா் எப்படி நுழைந்தாா், எப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பல மணி நேரம் மீட்பு நடவடிக்கையில் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்த என்டிஆா்எஃப் குழுவிற்கு நன்றி என்று அவா் பதிவில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com