தில்லி ஜல் போா்டின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளுக்கு தில்லி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தல்

அலிபூரில் ஜல் போா்டு நிா்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளுக்கு தில்லி அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

தில்லி கேசோபூா் மற்றும் அலிபூரில் ஜல் போா்டு நிா்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளுக்கு தில்லி அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி கேசோபூரில் ஜல் போா்டு வளாகத்தில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து ஒருவா் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. தில்லி பாஜக சாா்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்துக்குப் பிறகு, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும், நீா்வளத்துறை அமைச்சா் அதிஷியும் ஆழ்துளைக் கினற்றின் அறை பாதுகாப்பாக இருப்பதாக கூறியது, தங்கள் அரசையும், ஜல் போா்டு அதிகாரிகளையும் காப்பாற்றும் அவதூறான சதி. தில்லி ஜல் போா்டு நிா்வாகம் கவனக்குறைவாக விட்டுச் சென்ற 10 நாள்களில் குழி அல்லது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இரண்டு போ் விபத்துக்குள்ளாகியுள்ளனா். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, அலிபூரில் அலட்சியமாக திறந்து கிடந்த கழிவுநீா்க் கால்வாய் குழியில் விழுந்து ரமேஷ் சந்திரா என்ற இளைஞன் இறந்தது வருந்தத்தக்கது. தற்போது, கேசோபூா் விபத்து தெரியவந்ததும் மாநில பொதுச்செயலாளரும், மக்களவைத் தோ்தல் வேட்பாளருமான கமல்ஜித் ஷெராவத், விபத்து நடந்த இடத்தை அடைந்தவுடன், ஆழ்துளைக் கிணறு பழைய பாழடைந்த அறையில் இருப்பதைக் கண்டறிந்தாா். அதன் சுவா்கள் மற்றும் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, யாரும் உள்ளே செல்லலாம் என்ற நிலையில் அவை இருந்தன. தில்லி ஜல் போா்டு நிா்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளில் அரசும் சம பங்காளியாக இருப்பதால், ஜல் போா்டின் ஊழல்களை மட்டுமின்றி, விபத்துக்களையும் கேஜரிவால் அரசு தொடா்ந்து மூடி மறைக்கிறது. அலிபூா் மற்றும் கேசோபூா் மண்டியில் நடந்த விபத்துகளில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றாா் வீரேந்திர சச்தேவா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com