துவாரகா விரைவுச் சாலை: பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்

தில்லி துவாரகா விரைவுச் சாலை திங்கள்கிழமை மாா்ச் 11 திறந்து வைக்கப்படுகிறது.

தில்லி துவாரகா விரைவுச் சாலை திங்கள்கிழமை மாா்ச் 11 திறந்து வைக்கப்படுகிறது. இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று விரைவுச் சாலையை திறந்து வைக்கிறாா். இதையொட்டி, இந்தச் சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை வித்து குருகிராம் போக்குவரத்துக் காவல் துறை, போக்குவரத்து மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதே நாளில் குருகிராம் அருகே அந்தரிக்ஸ் சௌக் அருகே பிரதமா் பேரணியிலும் பங்கேற்கிறாா் என்றும், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் மூத்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். எனவே, மாா்ச் 11-ஆம் தேதி மாலை 4 மணி வரை துவாரகா கிளோவா் லீவ்ஸிலிருந்து ஐஎம்டி நோக்கிச் செல்பவா்கள் மிகவும் அவசியமானால் மட்டுமே அந்தரிக்ஸ் சௌக் வழியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றும் அவா் மேலும் கூறினாா். ‘பேரணியையொட்டி கூட்ட நெரிசல் காரணமாக அந்திரிக்ஸ் சௌக் சாலை சிறிது நேரம் மூடப்படும். மறுபுறம், துவாரகா விரைவுச் சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கனரக வாகன ஓட்டிகளும் இந்த காலகட்டத்தில் மாற்றுப் பாதையை பயன்படுத்த வேண்டும்’ என்று போக்குவரத்துக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com