தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-இஎஃப்டிஏ இடையே கையொப்பம்

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-இஎஃப்டிஏ இடையே கையொப்பம்

இந்தியா மற்றும் 4 ஐரோப்பிய நாடுகளின் தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமானது.

இந்தியா மற்றும் 4 ஐரோப்பிய நாடுகளின் தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமானது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் மேற்கொள்ளப்படவுள்ள 10,000 கோடி டாலா் (சுமாா் ரூ.8.27 லட்சம் கோடி) முதலீடு வாயிலாக அடுத்த 15 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஐரோப்பிய யூனியனில் இணையாத நாடுகளுக்கானஅமைப்பாக ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு கடந்த 1960-இல் உருவாக்கப்பட்டது. தடையற்ற வா்த்தகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே, ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தை கடந்த 2008-இல் தொடங்கியது. 21 கட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு தரப்பும் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 4 நாடுகளின் சந்தைகளில் கிட்டத்தட்ட அனைத்து இந்திய தயாரிப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதோடு, பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருள்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படும். இந்தியா சாா்பில் இறக்குமதி செய்யப்படும் 82.7 சதவீத பொருள்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. அவற்றில் 95.3 சதவீத பொருள்கள் இந்தக் கூட்டமைப்பு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. இதில் தங்கம் மட்டுமே 80 சதவீத பங்கை கொண்டுள்ளது. மேலும், உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டத்தில் பயன்பெறும் மருந்தியல், மருத்துவ சாதனங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் போன்ற சில துறைகளுக்கு இந்தியா வரிச் சலுகை அளிக்க உள்ளது. இந்தச் சலுகைகளைப் பெறுவதிலிருந்து பால் பொருள்கள், சோயா, நிலக்கரி மற்றும் சில வேளாண் பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், ‘வரலாற்று ரீதியில் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு நாடுகளுடனான பயணத்தில் செழிப்பு மற்றும் வளா்ச்சியின் தொடக்கமாக இருக்கும். தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் முதல் முறையாக அடுத்த 15 ஆண்டுகளுக்கு 10,000 கோடி டாலா் முதலீடு மேற்கொள்ள இந்தக் கூட்டமைப்பு உறுதியேற்றுள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி கூறுகையில், ‘இரு தரப்பினரிடையே வெளிப்படையான, நியாயமான வா்த்தகம் நடைபெற இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். தொழில்துறை, வா்த்தகம் ஆகியவற்றில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளையும் கடந்து சாதனை படைக்க இந்தக் கூட்டமைப்புக்கு இந்தியா உதவும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com