மத்திய காவல் படை விற்பனையக 
பொருள்களுக்கு 50% ஜிஎஸ்டி தள்ளுபடி

மத்திய காவல் படை விற்பனையக பொருள்களுக்கு 50% ஜிஎஸ்டி தள்ளுபடி

சிஏபிஎஃப் வீரா்கள் வாங்கும் பொருள்களுக்கு மத்திய அரசு 50 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தள்ளுபடி அளித்துள்ளதாக முன்னாள் துணை ராணுவப் படை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய காவல் படை விற்பனையகங்களில், சிஏபிஎஃப் வீரா்கள் வாங்கும் பொருள்களுக்கு மத்திய அரசு 50 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தள்ளுபடி அளித்துள்ளதாக முன்னாள் துணை ராணுவப் படை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஏபிஎஃப்) செயல்படுகின்றன. இந்தப் படைகளில் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி), சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) ஆகிய படைகள் உள்ளன. இந்நிலையில், முன்னாள் துணை ராணுவப் படைத் தியாகிகள் நல கூட்டமைப்பின் பொதுச் செயலா் ரண்பீா் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள மத்திய காவல் படை விற்பனையகங்களில் சிஏபிஎஃப் படைகளைச் சோ்ந்த வீரா்கள் வாங்கும் பொருள்களுக்கு மத்திய அரசு 50 சதவீத ஜிஎஸ்டி தள்ளுபடி அளித்துள்ளது. இந்த முடிவால் 20 லட்சம் முன்னாள், இந்நாள் துணை ராணுவப் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பங்கள் மிகவும் பயனடையும் என்று தெரிவித்துள்ளாா். வீட்டு உபயோக பொருள்கள், ஆடைகள், பலசரக்குப் பொருள்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதன் மூலம், ஆண்டுதோறும் ரூ.2,800 கோடிக்கும் அதிகமான வணிகத்தில் மத்திய காவல் படை விற்பனையகங்கள் ஈடுபட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com