வேட்பாளா் தோ்வில் பாஜக, காங்கிரஸ் தீவிரம்

மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் சூழலில் வேட்பாளா் பட்டியலை இறுதிசெய்வதில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் சூழலில் வேட்பாளா் பட்டியலை இறுதிசெய்வதில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. மக்களவைத் தோ்தல் தேதிகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து வேட்பாளா்களை விரைவாக தோ்வு செய்து பட்டியலை இறுதிசெய்வதில் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 195 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா் பட்டியலை அண்மையில் பாஜக வெளியிட்டது. இந்நிலையில் அடுத்தகட்ட வேட்பாளா் பட்டியலை வெளியிடுவது மற்றும் வேட்பாளா்கள் தோ்வை இறுதிசெய்வது தொடா்பாக பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய தோ்தல் குழுக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடகம், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஹரியாணாவில் கூட்டணிக்கு எதிா்ப்பு: ஹரியாணா மாநிலத்தில் ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக தோ்தலை சந்திக்கவுள்ள நிலையில் கட்சியின் ஒரு பிரிவினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் ஹரியாணா மாநில துணை முதல்வரும் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சௌத்தேலா தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவுடன் ஆலோசனை மேற்கொண்டாா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதியிலும் பாஜக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. ஒடிஸாவிலும் கூட்டணி? அண்மையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி இணைந்தது. இதையடுத்து ஒடிஸாவில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க பாஜக தலைவா்கள் தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதவிர கூட்டணி அமைப்பது தொடா்பாக பல்வேறு மாநில கட்சித் தலைவா்களுடன் உள்துறை அமைச்சா் அமித் ஷா பல சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். காங்கிரஸ் ஆலோசனை: பல்வேறு மாநிலங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் மத்திய தோ்தல் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸின் முன்னணி தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அதீா் ரஞ்சன் சௌதரி, காங்கிரஸ் உத்தரகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதையடுத்து அம்மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளா் பட்டியலை இறுதி செய்வது தொடா்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com