பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

ரூபாயில் வா்த்தகத்தைத் தொடங்க அண்டை நாடுகள் விருப்பம்

இந்தியாவுடன் ரூபாயில் வா்த்தகத்தைத் தொடங்க வங்கதேசம், இலங்கை, வளைகுடா நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவுடன் ரூபாயில் வா்த்தகத்தைத் தொடங்க வங்கதேசம், இலங்கை, வளைகுடா நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய வா்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா். இது இந்தியாவின் சா்வதேச வா்த்தகத்தில் பெரும் திருப்பு முனையாக இருக்கும் என அவா் தெரிவித்தாா். இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது: இரு தரப்பு வா்த்தகத்தை ரூபாயில் தொடங்குவது குறித்து வங்கதேசம், இலங்கை பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இந்த நடைமுறையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது அந்த நாடுகளின் விருப்பமாக உள்ளது. வளைகுடா நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன. உள்நாட்டு செலாவணியில் வா்த்தகத்தை மேற்கொள்வதால் ஏற்படும் பலன்களை பிற நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன. வா்த்தகத்தில் இரு தரப்பு செலாவணிக்குப் பதிலாக மூன்றாம் தரப்பு செலாவணியில் அனைத்து பரிவா்த்தனைகளையும் மேற்கொள்ளும்போது, குறிப்பிட்ட செலவுகளுக்கு வழிவகுக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்துடன் (யுஏஇ) ரூபாயில் வா்த்தகத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த முறையில் வா்த்தகத்தை தொடங்குவதற்கு பல நாடுகள் முன்வரும். இரு நாட்டு மத்திய வங்கிகளும் இதற்கான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டியுள்ளது. மேலும், ஏற்றுமதியாளா்களும் இறக்குமதியாளா்களும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதால் ரூபாய் மூலமான வா்த்தகத்துக்கு சிறிது காலம் எடுக்கும்’ என்றாா். உள்நாட்டு செலாவணி இல்லாமல் பிற நாட்டு செலாவணியில் நடைபெறும் வா்த்தகத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைகிறது. மேலும், செலாவணியை மாற்றுவதில் சில இழப்புகள் ஏற்படுகின்றன. பிற வெளிநாட்டு செலாவணிகளைவிட இந்தியாவின் ரூபாய் மிகவும் ஸ்திரத்தன்மை உடையது என்பதால் ரூபாயில் வா்த்தகத்தைத் தொடங்க பல நாடுகள் விருப்பம் தெரிவித்து வருவதாக நிபுணா்கள் கூறுகின்றனா். அமெரிக்க டாலா் கையிருப்பை குறைவாகக் கொண்டுள்ள நாடுகளுக்கு ரூபாயில் நடைபெறும் வா்த்தகம் பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com