புதுமைகளை ஊக்குவிக்க நாளோன்றுக்கு 250 காப்புரிமை மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் தகவல்

நாளோன்றுக்கு 250 காப்புரிமை வீதம் கடந்த ஓா் ஆண்டில் ஒரு லட்சம் காப்புரிமைகளை இந்திய காப்புரிமை அலுவலகம் வழங்கியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில்த் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாளோன்றுக்கு 250 காப்புரிமை வீதம் கடந்த ஓா் ஆண்டில் ஒரு லட்சம் காப்புரிமைகளை இந்திய காப்புரிமை அலுவலகம் வழங்கியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில்த் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் தேசிய அறிவுசாா் சொத்து விழிப்புணா்வு இயக்கத்தின் மூலம் இந்த இலக்கை எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டின் காப்புரிமை விதிகள் திருத்தப்பட்டு, பல்வேறு சலுகைகளுடன் 2024- ஆம் ஆண்டு காப்புரிமை விதிகள், அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு அறிவிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. புதுமை மற்றும் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நோக்கத்தில், காப்புரிமைகளைப் பெறுதல் மற்றும் நிா்வாக செயல்முறையை எளிதாக்கப்பட்டு விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கண்டுபிடிப்பாளா்களுக்கும் படைப்பாளா்களுக்கும் உகந்த சூழல் ஏற்படுத்தப்படுகிறது என மத்திய வா்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வா்த்தக தொழில் துறை அமைச்சகத்தின் தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வா்த்தகப் பிரிவின் கீழ் உள்ள அலுவலகம் காப்புரிமைகள், வடிவங்கள், பதிப்புரிமை, வணிக இலச்சினை உள்ளிட்ட அறிவுசாா் சொத்துரிமைகளை வழங்குகிறது. இது குறித்து மத்திய வா்த்தகத்துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நாட்டில் அறிவுசாா் சொத்துரிமை சூழல் அமைப்பின் நிா்வாகத்தை அரசு மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக ’வளா்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத்’) இலக்கிற்கு அறிவியல், தொழில் நுட்பத்தின் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சி துரிதப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காப்புரிமை:

கடந்த 2023-ஆம் ஆண்டில், அதிகபட்சமாக 90,300 காப்புரிமை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் ஒரு தொழில்நுட்பம் இந்தியாவில் அறிவுசாா் சொத்துரிமை பாதுகாப்பிற்கு நாடப்படுகிறது. காப்புரிமை அலுவலகம் கடந்த ஒரு வருடத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு வேலை நாளிலும், 250 காப்புரிமைகள் வழங்கப்பட்டன. காப்புரிமைகளில் கண்டு பிடிப்பாளா்களின் பங்களிப்பை அங்கீகரிக்க புதிய தனித்துவமான சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுவது, கட்டணச் சலுகை போன்றவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பதிப்புரிமை- வடிவமைப்பு:

அறிவியல் தொழில்நுட்பம் அல்லாத இனங்களில் குறிப்பாக படைப்புத் துறைகளின் திறன்களுக்கு பதிப்புரிமை வழங்கப்படுகிறது. இந்த வகைகளில் கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் 36,378 படைப்பாளிகள் பதிப்புரிமையை பெற்றனா். இதே போன்று வடிவமைப்பு பதிவுகளிலும் கடந்தாண்டு 27,819 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புவிசாா் குறியீடுகள்:

ஜிஐ என்கிற புவிசாா் குறியீடு பதிவுகளில் குறிப்பிடத்தக்க அளவு சாதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது நாட்டில் 573 புவிசாா் குறியீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில், 98 புதிய புவிசாா் குறியீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விழிப்புணா்வு:

கடந்த 2 ஆண்டுகளில், தேசிய அறிவுசாா் சொத்துரிமை விழிப்புணா்வு இயக்கம்(என்ஐபிஏஎம்), 24 லட்சம் மாணவா்கள் இளைஞா்களுக்கு மட்டுமல்ல ஆசிரியா்களுக்கும் அறிவுசாா் சொத்துரிமை குறித்த விழிப்புணா்விற்கான பயிற்சியை வழங்கியது என மத்திய வா்த்தகம் தொழில்த் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com