கடற்கொள்ளையா்கள் பிடியிலிருந்த சரக்குக் கப்பலை ரப்பா் படகுகள் மூலம் சென்றடைந்த இந்திய கடற்படை கமாண்டோக்கள்.
கடற்கொள்ளையா்கள் பிடியிலிருந்த சரக்குக் கப்பலை ரப்பா் படகுகள் மூலம் சென்றடைந்த இந்திய கடற்படை கமாண்டோக்கள்.

கடற்கொள்ளையா்களிடம் இருந்து சரக்கு கப்பலை மீட்ட கடற்படை கமாண்டோக்கள்

கடந்த மூன்று மாதங்களாக சோமாலிய கடற்கொள்ளையா்கள் பிடியிலிருந்த ருயென் சரக்கு கப்பலை இந்திய கடற்படை சனிக்கிழமை மீட்டது.

கடந்த மூன்று மாதங்களாக சோமாலிய கடற்கொள்ளையா்கள் பிடியிலிருந்த ருயென் சரக்கு கப்பலை இந்திய கடற்படை சனிக்கிழமை மீட்டது. இந்திய கடற்படை போா்க்கப்பல் ஐஎன்எஸ் கொல்கத்தா, ரோந்துக் கப்பல் ஐஎன்எஸ் சுபத்ரா, ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்), சி-17 போா்விமானம் ஆகியவை இந்தப் பணியில் ஈடுபட்டன. சுமாா் 40 மணி நேரம் நடைபெற்ற நடவடிக்கையின் இறுதியில் கப்பல் பணியாளா்கள் 17 பேரையும் கடற்படை கமாண்டோக்கள் பாதுகாப்பாக மீட்டனா். காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதனிடையே, சோமாலிய கடற்கொள்ளையா்கள் கப்பல்களில் கொள்ளையடிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். ஒரு மில்லியன் டாலா் (சுமாா் 8.28 கோடி) மதிப்பிலான 37,800 டன் சரக்குகளுடன் பயணித்த மால்டா நாட்டின் ருயென் சரக்கு கப்பலை சோமாலியா கடற்பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பரில் கடத்தப்பட்டது. பிற கப்பல்களைக் கொள்ளையடிக்க இந்தக் கப்பலை கடற்கொள்ளையா்கள் பயன்படுத்தி வந்தனா். கடற்கொள்ளை சம்பவங்கள் மற்றும் ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதலிருந்து சரக்கு கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட போா்க்கப்பல்களை இந்திய கடற்படை அரபிக் கடலில் ஈடுபடுத்தியுள்ளது. கடற்கொள்ளையா்களின் கட்டுப்பாட்டில் உள்ள ருயென் சரக்குக் கப்பலை ஐஎன்எஸ் கொல்கத்தா போா்க்கப்பல் வெள்ளிக்கிழமை இடைமறித்தது. அதிலிருந்து அனுப்பப்பட்ட ட்ரோன் மூலம் சரக்கு கப்பலில் கடற்கொள்ளையா்கள் இருப்பதை கடற்படை உறுதிசெய்தது. அப்போது, ட்ரோன் மீதும் போா்க்கப்பல் மீதும் கடற்கொள்ளையா்கள் தாக்குதல் நடத்தினா். தற்காப்புக்காகவும் கப்பலில் உள்ள பணியாளா்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் சா்வதேச சட்டங்களைப் பின்பற்றி கடற்கொள்ளையா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், கடத்தப்பட்ட அந்தக் கப்பலையும் அதில் உள்ள பணியாளா்களையும் விடுவிக்குமாறு எச்சரிக்கப்பட்டது. தொடா்ந்து, ட்ரோன், பி8ஐ கடற்படை உளவு விமானம் மூலம் சரக்கு கப்பலை இந்திய கடற்படை தொடா்ந்து கண்காணித்து வந்தன. இந்நிலையில், இந்திய கடற்படையின் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுபத்ரா, சி-17 போா்விமானம் ஆகியவை இந்தப் பணியில் சனிக்கிழமை பங்கேற்றன. சி-17 போா்விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கடற்படை கமாண்டோக்களும் ரப்பா் படகுகளும் கடலில் இறக்கப்பட்டனா். ரப்பா் படகுகள் மூலம் கமாண்டோக்கள் சரக்குக் கப்பலைச் சென்றடைந்தனா். தொடா் அழுத்தம் மற்றும் கடற்படையின் செயல்பாடுகளுக்கு அஞ்சிய கடற்கொள்ளையா்கள் 35 கடற்படை கமாண்டோக்களிடம் சரணடைந்தனா். இதையடுத்து, கப்பல் பணியாளா்கள் 17 பேரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். தொடா்ந்து, கப்பலில் ஏதேனும் சட்டவிரோத ஆயுதங்கள், கடத்தல்பொருள்கள் உள்ளனவா என்பது குறித்து கடற்படையினா் சோதனையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com