சிக்கிம், அருணாசல் பேரவைத் தோ்தல்: வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

சிக்கிம், அருணாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி ஜூன் 4-இல் இருந்து ஜூன் 2-க்கு மாற்றப்பட்டுள்ளது.

சிக்கிம், அருணாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி ஜூன் 4-இல் இருந்து ஜூன் 2-க்கு மாற்றப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தலுடன் சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது. அருணாசல பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும், 60 பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதே நாளில், சிக்கிமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 32 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மக்களவை, பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்திருந்தது. ஆனால், இவ்விரு மாநிலங்களின் பேரவை பதவிக் காலம் ஜூன் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. எனவே, பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை அன்றைய தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதேநேரம், இந்த மாநிலங்களில் மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com