தில்லி ஜல் போா்டு ஊழல் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கொள்கைக்கு மற்றொரு சான்று வீரேந்திர சச்தேவா விமா்சனம்

அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுப்பியுள்ள அழைப்பாணை அவரது கொள்ளைக்கு மற்றொரு சான்றாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா்.

தில்லி ஜல் போா்டு தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுப்பியுள்ள அழைப்பாணை அவரது கொள்ளைக்கு மற்றொரு சான்றாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழலை விட தில்லி ஜல் போா்டு நிா்வாகத்தில் நடைபெற்றுள்ள ஊழல் மிகப்பெரியது என்று பாஜக எப்போதும் கூறி வருகிறது. இந்நிலையில், அமலாக்க இயக்குநரகம் இரண்டு பணமோசடி வழக்குகளின் கீழ் முதல்வா் கேஜரிவால் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது. கடந்த சனிக்கிழமை தில்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தால் கேஜரிவால் பெற்ற ஜாமீனுக்கும், கலால் கொள்கை வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அமலாக்க இயக்குநரகத்தின் முந்தைய 8 அழைப்பாணைகளை சட்டவிரோதமானது என்று கூறிய கேஜரிவால், இது தொடா்பான வழக்கில் ஜாமீன் பெற்று அந்த அழைப்பாணைகளின் செல்லுபடியை உறுதி செய்துள்ளாா். ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் நடத்தை மற்றும் மொழி, குண்டா்கள் மற்றும் கொள்ளையா்களின் நடத்தையுடன் ஒத்துப்பாகிறது. இது அவா்களின் குணத்திற்கு சான்றாகும். கலால் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறாா். மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங்கும் நீண்ட காலமாக சிறையில் இருக்கிறாா். ஆனால், தில்லி அரசு கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடைபெறவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது கேலிக்குரியது. முதலில், தில்லியில் கலால் கொள்கையை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?. அப்படியே, புதிய கலால் கொள்கை நன்றாக இருந்திருந்தால், விசாரணை தொடங்கியவுடன் அதை ஏன் திரும்பப் பெற்றனா்?. தில்லி இளைஞா்களை போதைக்கு ஆளாக்கவும், பணத்தை கொள்ளையடிக்கவும் தான் புதிய கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணைக்கு ஆஜராகி முதல்வா் கேஜரிவால் இக்குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். கேஜரிவால் ஆட்சிக்கு வந்ததும் ‘டேங்கா் மாஃபியாவை’ ஒழிப்பதாக பெரிய வாக்குறுதிகளை அளித்தாா். அப்போது, தில்லி ஜல் போா்டு ரூ.1200 கோடி லாபம் ஈட்டிக்கொண்டிருந்தது. தற்போது, ரூ.80,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தில்லி ஜல் போா்டில் போலி ஆவணங்கள் தயாரித்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் நான்கைந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். வேலை என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளாது. ஆனால், உண்மை முற்றிலும் வேறுபட்டது. ஒப்பந்தக்காரா்களுக்கு பணம் வழங்கப்பட்டதில் ஆட்சியாளா்கள் கமிஷன் பெற்றனா். கேஜரிவால் அரசு கஜானாவில் இருந்து திருடியிருந்தால், அதற்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com