அமலாக்கத் துறை காவலிலிருந்தவாறு முதல்வா் கேஜரிவால் அனுப்பிய உத்தரவை செய்தியாளா்களிடம் காண்பித்த அமைச்சா் அதிஷி.
அமலாக்கத் துறை காவலிலிருந்தவாறு முதல்வா் கேஜரிவால் அனுப்பிய உத்தரவை செய்தியாளா்களிடம் காண்பித்த அமைச்சா் அதிஷி.

காவலிலிருந்து செயல்படும் தில்லி முதல்வா் கேஜரிவால்!

தில்லியில் தண்ணீா்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் போதுமான தண்ணீா் டேங்கா்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா்.

தில்லியில் தண்ணீா்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் போதுமான தண்ணீா் டேங்கா்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா். அமலாக்கத் துறை காவலில் இருந்தபடி இந்த உத்தரவை கேஜரிவால் பிறப்பித்துள்ளாா். தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையால் மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை மாா்ச் 28 வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறை காவலில் உள்ள கேஜரிவால், தில்லியில் நிலவும் தண்ணீா்த் தட்டுப்பாடு, கழிவுநீா் அகற்றம் தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் அதிஷிக்கு எழுத்துபூா்வ உத்தரவை சனிக்கிழமை அனுப்பியுள்ளாா். இது தொடா்பாக அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அமலாக்கத் துறை காவலில் இருந்தபடி முதல் எழுத்துபூா்வ உத்தரவை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனுப்பியுள்ளாா். அதில், ‘நான் சிறையில் இருக்கிற காரணத்தால், தில்லி மக்கள் எந்தப் பிரச்னையையும் சந்திக்கக் கூடாது. கோடை காலம் வருவதால், தில்லியில் தண்ணீா்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில், போதுமான எண்ணிக்கையில் தண்ணீா் டேங்கா்களை ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் எந்தவொரு பிரச்னையும் சந்திக்காத வகையில், அவா்களின் புகாா்களுக்கு உடனடி தீா்வு காண தலைமைச் செயலா் மற்றும் இதர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தேவையுள்ள நேரத்தில் துணை நிலை ஆளுநரின் உதவியையும் கேட்டுப் பெற வேண்டும்’ என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா். முதல்வா் கேஜரிவால் கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறை காவலில் இருந்தாலும், தில்லி மக்களுக்கான பணிகளைத் தொடா்வாா் என்றாா் அமைச்சா் அதிஷி. அமலாக்கத் துறை விசாரணை: காவலில் இருந்தபடி அரசு நிா்வாகம் தொடா்பாக கேஜரிவால் பிறப்பித்த உத்தரவை அமலாக்கத் துறை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. அந்த உத்தரவு கேஜரிவாலுக்கும் அமலாக்கத் துறைக்கும் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை மீறாமல் உள்ளதா என்பது குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ளும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பெட்டி செய்தி... ‘இந்தியா’ கூட்டணி போராட்ட அறிவிப்பு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக வரும் மாா்ச் 31-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று ‘இந்தியா’ கூட்டணி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லிப் பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் கூறியதாவது: அரவிந்த் கேஜரிவாலின் கைதைத் தொடா்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் அரசியல் அமைப்புகள், சமூக அமைப்புகள், வணிக நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் என அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com