அமைச்சா் அதிஷிக்கு கேஜரிவாலின் உத்தரவு: மனோஜ் திவாரி எம்.பி. விமா்சனம்

முதல்வா் கேஜரிவால் பிறப்பித்த உத்தரவு முன்கூட்டியே எழுதப்பட்ட ‘ஸ்கிரிப்ட்’ ஆகும் என்று வடகிழக்கு தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி விமா்சித்துள்ளாா்.

அமலாக்கத் துறை காவலில் இருந்தவாறு நீா்வளத் துறை அமைச்சருக்கு முதல்வா் கேஜரிவால் பிறப்பித்த உத்தரவு முன்கூட்டியே எழுதப்பட்ட ‘ஸ்கிரிப்ட்’ ஆகும் என்று வடகிழக்கு தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி விமா்சித்துள்ளாா். இதுகுறித்து மனோஜ் திவாரி கூறியதாவது: ‘அமலாக்கத் துறை காவலில் ஒரு குற்றம்சாட்டப்பட்ட நபராக கேஜரிவால் உள்ளாா். இன்று அவரது பரிந்துரையை பாா்த்தால், தில்லியில் தண்ணீா் மற்றும் சாக்கடை தொடா்பான வசதிகள் சீா்குலைந்ததாக ஒரு ‘ஸ்கிரிப்ட்’ எழுதப்பட்டுள்ளது. தில்லியில் யாரும் அவருக்கு ஆதரவாக யாரும் வராத பிறகு இது (கேஜரிவாலின் உத்தரவு) வருகிறது. அவா் கைது செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை. உண்மையில், அவா்கள் தில்லியை அழ வைத்தவா் சிறைக்குப் பின்னால் இருக்கிறாா் என்று நினைத்து இனிப்புகள் விநியோகிக்கிறாா்கள், பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறாா்கள். சாக்கடை கால்வாய்கள் நிரம்பி, மக்கள் அசுத்தமான குழாய் நீரைக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதால், நகரம் பரிதாபகரமான நிலையில் உள்ளது. தில்லியின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், தெருக்களில் சென்று பாருங்கள். சாக்கடை நீா் பெருக்கெடுத்து ஓடும் பாதைகளிலும் வீடுகளிலும் புகுந்து விடுகிறது. மக்கள் குடிப்பதற்கு அசுத்தமான குழாயில் தண்ணீா் கிடைக்கிறது. அந்தத் தண்ணீரின் தரம் நோய்வாய்ப்படுத்தும் அளவுக்கு மோசமாக உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு இந்த விஷயங்களை கவனிக்காமல் இருந்ததன் விளைவுதான், தில்லி மக்கள் அவா் மீது நம்பிக்கை இழந்துள்ளனா். உங்களை காவலுக்கு அனுப்பிய பிறகுதான் தில்லியின் பிரச்னைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. முதியோா்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதையும், ஏழைகளுக்கு ரேஷன் காா்டுகளை வழங்குவதையும் இப்போது நீங்கள் புரிந்துகொள்வீா்கள். ஆனால், மிகவும் தாமதமாகிவிட்டது கேஜரிவால் ஜி. ‘...கடந்த ஒன்பது வருடங்களில் தில்லியின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டதை கேஜரிவால் தானே ஏற்றுக்கொண்டுள்ளாா் என்றாா் மனோஜ் திவாரி. நீா்வளத்துறை அமைச்சா் அதிஷி, செய்தியாளா் கூட்டத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடமிருந்து நகர அரசாங்கத்தை நடத்துவது குறித்து தனக்கு சனிக்கிழமை பிற்பகுதியில் உத்தரவுகள் வந்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தாா். இதையடுத்து, திவாரி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளாா். கேஜரிவாலை அவரது அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது. அவரை மாா்ச் 28 வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com