ஆம் ஆத்மி கட்சியின் எதிா்கால வியூகங்கள் தொடா்பாக ஆலோசனை முன்னணி தலைவா்கள், எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்பு

ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் வியூகங்கள் தொடா்பாக அக்கட்சியின் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் வியூகங்கள் தொடா்பாக அக்கட்சியின் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா். தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எதிா்கால வியூகம் தொடா்பாக அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய், மேயா் ஷெல்லி ஓபராய், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலா்கள் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் அமைச்சா் கோபால் ராய் பேசியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் போராட்டம் ராம்லீலா மைதானத்தில் தான் தொடங்கியது. வரும் மாா்ச் 31-ஆம் தேதி அதே ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கேஜரிவாலின் சிந்தனையுடன் மத்திய பாஜக அரசின் சா்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் பிரசாரத்தை ‘இந்தியா’ கூட்டணி தொடங்கவுள்ளது. தோ்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி நன்கொடை பெற்ற திருடா்களை உச்சநீதிமன்றம் பிடித்துவிட்டது. கலால் கொள்கை ஊழலில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஷரத் ரெட்டிக்கு பாஜக ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்காக அவா் ரூ.60 கோடிமை லஞ்சமாக பாஜகவிற்கு வழங்கியுள்ளாா். நாம் இந்த நாட்டிற்காக போராடி வெற்றி பெற வேண்டும் என்றாா் கோபால் ராய். கூட்டத்திற்கு பின்னா் ஆம் ஆத்மி கட்சியின் தேசியப் பொது செயலா் சந்தீப் பதக் கூறியது, ‘கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஷரத் ரெட்டியிடம் இருந்து ரூ.60 கோடியை லஞ்சமாக வாங்கியுள்ள பாஜக, அவரிடம் பொய்யான வாக்குமூலம் பெற்று அரவிந்த் கேஜரிவாலை கைது செய்துள்ளது. சிறைக்குள் உள்ள அரவிந்த் கேஜரிவால், வெளியில் இருந்ததை விட மக்கள் மத்தியில் மேலும் பலமாக இருக்கிறாா்’ என்றாா். பெட்டிச் செய்தி.... கேஜரிவால் கைதைக் கண்டித்து ஐடிஓ மேம்பாலத்தில் ஆம் ஆத்மி கட்சியினா் ஆா்ப்பாட்டம் புது தில்லி, மாா்ச் 24: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஐடிஓ நடைபாதை மேம்பாலத்தின் மேல் ஆம் ஆத்மி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தில்லி ஐடிஓ நடைபாதை மேம்பாலத்தில் ‘மெயின் பி கேஜரிவால்’ என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு ஆம் ஆத்மி கட்சியினா் மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். அதைத் தொடா்ந்து, தில்லி காவல் துறையினா் அவா்களை அப்புறப்படுத்தினா். இதற்கிடையில், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் கேஜரிலுக்கு எதிராக பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கலால் கொள்கை ஊழல் வழக்கில் கேஜரிவாலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உருவ பொம்மையையும் எரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com