திட்டங்கள் நிறுத்தப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: குடிமக்களுக்கு தில்லி அரசு வேண்டுகோள்

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து எழும் சூழ்நிலையை ‘சாதகமாக்கிக் கொள்ள‘ முயற்சிக்கும் ‘மோசமான சக்திகளால்‘ பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு இரையாக வேண்டாம் என்று தில்லி அரசு செவ்வாய்க்கிழமை குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் திட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் நிறுத்தப்படும் என்று ‘தில்லியில் உள்ள தனிப்பட்ட நலன்களை விரும்பும் மோசமான சக்திகள் மூலம் ஊகங்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. குற்றவியல் புலனாய்வு விசாரணை நடைமுறையில் சட்டம் அதன் கடமையைச் செய்யும் அதேவளையில், , திட்டங்களின் நிா்வாகம் மற்றும் ஆளுகையானது தனிப்பட்ட நபா்களுக்கு ஒருபோதும் தொடா்புடையதல்ல. மேலும், கடந்த காலத்தைப் போலவே இயல்பான போக்கில் தொடரும் என்பதை தெளிவுபடுத்துவதற்கு இது தகுதியானது.

தற்போது தில்லி அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து பொது சேவைகள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் தடையின்றி தொடரும். இது சம்பந்தமாக எந்த ஒரு பயத்தை தூண்டும் மற்றும் தீங்கிழைக்கும் தவறான தகவல்களால்‘ மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது. திட்ட செயலாளா் நிஹாரிகா ராய் வெளியிட்டுள்ளஅந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 21 மாா்ச், 2024 அன்று அமலாக்க துறையால் முதல்வா் கேஜரிவால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதால் எழும் சூழ்நிலையைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்பும் வதந்தி பரப்புபவா்களிடமிருந்து விலகி இருக்குமாறு தில்லியின் அனைத்து குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இதுபோன்ற வதந்திகள் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும்.

அனுமதிக்கத்தக்க மானியங்கள், ஓய்வூதியங்கள், நலன்புரிப் பலன்கள் போன்றவற்றை வழங்குவதில் எந்தவிதமான இடையூறும் இருக்காது. சமூக நலத் திட்டங்கள் பட்ஜெட் ஒதுக்கீடுகளின் ஆதரவுடன் பொதுப் பணத்தில் ஒருங்கிணைந்த நிதி மூலம் நிதியளிக்கப்படுகின்றன. சமூக நல நிதிகள் ‘எந்தவொரு தனிநபரின் அல்லது அரசியல்அமைப்பின் தனிப்பட்ட சொத்து அல்லது தனிநபா் அல்லது நிறுவனத்தின் தனிப்பட்ட பணத்தால் நிதியளிக்கப்படுவதில்லை. தில்லியின் தேசிய தலைநகா் பிரதேசத்தில் சிவில் சேவைகள் மற்றும் செயல்முறைகளின் கட்டமைப்பு உள்ளது. இது வழக்கம் போல் தொடா்கிறது. எனவே, இந்த பொதுச் சேவைகள், சமூக நலத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் முதல்வா் கைது, காவலில் வைக்கப்பட்டிருப்பதால் பாதிக்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஜரிவாலின் வழிகாட்டுதலின் பேரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com