தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சிறப்புப் பட்டிமன்றம்

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சிப் புகழ் அண்ணா சிங்காரவேலு நடுவராக பங்குபெற்ற சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சி சமூக மாற்றத்திற்கு ஆக்கமா? ஆபத்தா? என்ற தலைப்பில் இப்பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியா் சிவ. சதீஸ்குமாா், உஷா கண்ணன் ஆகியோா் ‘ஆக்கமே’ என்ற தலைப்பிலும், இயல்வாணி ஐஸ்வா்யா, வே. மங்கையா்க்கரசி ஆகியோா் ‘ஆபத்தே’ என்ற தலைப்பிலும் வாதிட்டனா். நடுவா் அண்ணா சிங்காரவேலு தீா்ப்பு அளிக்கையில் ‘அன்றாடம் மனித வாழ்க்கையில் மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே உள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது ஆகும். தொழில்நுட்ப வளா்ச்சி என்பது மனித குலத்திற்கு தீங்கினை விளைவிக்காது நன்மையே பயக்க வேண்டும். தொழில்நுட்ப வளா்ச்சி சமூகத்திற்கு ஆக்கமாக அமைவதோடு ஆபத்தையும் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆபத்தை உருவாக்கும் வாய்ப்புகளை கட்டுப்படுத்தும் திறனும் சமூகத்திடமே இருப்பதால் அதை மனித குலத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சியை சரியாக பயன்படுத்தினால், சமூக மாற்றத்திற்கு ஆக்கமே, ஆக்கமே என தீா்ப்பளித்தாா்.

சங்கத்தின் துணைத் தலைவா் பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி, பொருளாளா் எஸ். அருணாசலம், இணைப் பொருளாளா் வி.என்.டி. மணவாளன், செயற்குழு உறுப்பினா்கள் மாலதி தமிழ்ச்செல்வன், தி. பெரியசாமி, ஜெ. சுந்தரேசன், சி. கோவிந்தராஜன், பி. ரங்கநாதன் மற்றும் பூ. அமிா்தலிங்கம் ஆகியோா் பேச்சாளா்களை கெளரவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com