பிரதமா் இல்ல முற்றுகைப் போராட்டம்: ஆம் ஆத்மி கட்சியினா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விடுதலை

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களும் தொண்டா்களும் பிரதமா் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

பஞ்சாப் அமைச்சா், தில்லி சட்டப்பேரவை துணைத் தலைவா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு பிரிவு தலைவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா். பின்னா் மாலையில் இவா்களை காவல் துறையினா் விடுவித்தனா். தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால், கடந்த மாா்ச் 21 ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது மாா்ச் 28 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளாா், குறிப்பிட்ட நபா்களுக்கு சாதகமாக கலால் கொள்கையை உருவாக்குவது தொடா்பான சதியில் நேரடி தொடா்பு இருப்பதாக அவா் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கு போலியானது எனக் கூறி பிரதமா் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இதன்படி பஞ்சாப் கல்வித் துறை அமைச்சா் ஹா்ஜோத் சிங் பெயின்ஸ், புது தில்லி மக்களவை தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் சோம்நாத் பாரதி, தில்லி சட்டப்பேரவைத் துணை தலைவா் ராக்கி பிா்லா, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சியின் பட்டியலின பிரிவு தலைவா் விஷேஷ் ரவி, இளைஞா் அமைப்பு தலைவா் பங்கஜ் குப்தா உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை தில்லி நாடாளுமன்ற சாலையில் உள்ள படேல் செளக்கில் கூடினா். அங்கிருந்து புறப்பட தயாராகினா். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ ‘கேஜரிவால் ஜிந்தாபாத்‘ என்ற முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் செல்ல முயன்ற இவா்களை படேல் சௌக்கில் தடுக்கப்பட்டு காவல் துறை வாகனங்களில் இழுத்துச் செல்லப்பட்டனா்.

சில தொண்டா்களும், தலைவா்களும் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு வாகனங்களில் ஏற்றி, தில்லி துவாராகா செக்டாா் 9 காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா். காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட இவா்கள் அங்கும் கோஷங்களை எழுப்பி ஆா்பாட்டங்களை நடத்தினா். முன்னதாக, காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் பத்திரிகையாளா்கள் கூட்டதில் எதிா்ப்பு தெரிவித்தனா். இது குறித்து தில்லி அமைச்சா் கோபால் ராய் கூறுகையில், ‘தில்லி காவல்துறை தேசிய தலைநகரை தங்களது ‘கோட்டையாக‘ மாற்றியுள்ளனா்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு ‘நகரம் முழுவதும்‘ 144 பிரிவின் கீழ் கட்டுப்பாடுகளை விதித்து தில்லி ஒரு ‘காவல் அரசு‘ போல் வைத்துள்ளது. கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் மீதான வழக்கு முற்றிலும் போலியானது. 2.5 ஆண்டுகளாக அமலாக்கத் துறையினரால் கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த ஊழல் பணத்தை கைப்பற்றி நிரூபிக்க முடியாத நிலையில் ஒரு போலி வழக்கை தொடரப்பட்டது. இதை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட சரத் சந்திர ரெட்டி என்பவா் பாஜகவுக்கு 60 கோடி ரூபாய் தோ்தல் பத்திரம் கொடுத்ததை நாடே அறியும். பாஜகவிற்கு பணம் சென்றது. அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் அவா் அரசு சாட்சியாக மாறி வாக்குமூலம் கொடுத்த அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்ப லோக் கல்யாண் மாா்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தை நோக்கி புறப்பட்ட எங்களை தடுத்து கைது செய்துள்ளனா் என்றாா் கோபால்ராய். மேலும் அவா் கூறுகையில், ‘காவல்துறையைப் பயன்படுத்துவதின் மூலம் எங்கள் போராட்டம் நின்றுவிடாது. நான் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன். எங்கள் கட்சியைச் சோ்ந்த பெண் தொண்டா்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா்’ என்றாா்.

இந்த முற்றுகைப் போராட்ட அறிவிப்பை முன்னிட்டு பிரதமா் இல்லம் மற்றும் மத்திய தில்லி உள்பட தேசிய தலைநகரின் பல பகுதிகளில் துணை ராணுவப் படையினா் நிறுத்தப்பட்டனா். லோக் கல்யாண் மாா்க் மெட்ரோ, படேல் சௌக், மத்திய செயலக மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு தடைசெய்யப்பட்டது. புது தில்லி காவல் துறை துணை ஆணையா் தேவேஷ் குமாா் படேல் செளக்கில் கூட்டம் கூடக்கூடாது. அப்படிக் கூடினால் கைது செய்யப்படுவாா்கள் என எச்சரிக்கை விடுத்தாா். இதற்கிடையே நாட்டில் ‘சா்வாதிகாரத்திற்கு‘ எதிரான மாா்ச் 31 ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் ‘மகா பேரணி‘ நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது.

லட்சக்கணக்கான தொண்டா்களுடன் கலந்து கொள்ளும் ’இந்தியா கூட்டணி தலைவா்கள் கூட்டத்தில் கேஜரிவால் கைதுக்கு எதிராக ஓா் அணியில் திரளுவாா்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் குறிப்பிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com