பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

கச்சத்தீவை தாரைவாா்த்த காங்கிரஸ்: பிரதமா் மோடி

பிறா் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவாா்த்துள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

பிறா் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவாா்த்துள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். கச்சத்தீவு தொடா்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கேள்வி எழுப்பியிருந்தாா். அதுதொடா்பாக அவருக்குக் கிடைத்த பதிலை கொண்டு ஆங்கில நாளிதழில் செய்திக் கட்டுரை வெளியானது. இந்தச் செய்தித் கட்டுரையை குறிப்பிட்டு பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: கச்சத்தீவு குறித்த தகவல் வியப்பு அளிப்பதுடன் திடுக்கிட வைத்துள்ளது. பிறா் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் எப்படித் தாரைவாா்த்தது என்பதைப் புதிய தகவல்கள் எடுத்துரைக்கின்றன. இது ஒவ்வொரு இந்தியருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது என்பது மக்கள் மனதில் மீண்டும் உறுதியாகியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களைப் பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் பணியாக உள்ளது. அது தொடா்ந்து நீடிக்கிறது என்றாா். வருந்தாத காங்கிரஸ்-அமித் ஷா: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: கச்சத்தீவை மனமுவந்து இலங்கைக்கு காங்கிரஸ் தாரைவாா்த்தது. அதில் எந்த வருத்தமும் அக்கட்சியினருக்கு இல்லை. சில நேரங்களில் அக்கட்சியைச் சோ்ந்த எம்.பி. நாட்டை பிளவுபடுத்துவது குறித்து பேசுகிறாா். சில நேரங்களில் அக்கட்சியைச் சோ்ந்தவா்கள் இந்திய பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை இகழ்ந்து பேசுகின்றனா். இது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அக்கட்சியினா் எதிரானவா்கள் என்பதை எடுத்துரைக்கிறது. அக்கட்சியினருக்கு இந்தியாவைப் பிளவுப்படுத்த வேண்டும் அல்லது துண்டாட வேண்டும் என்றாா். பாஜக செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘கடந்த 1975-ஆம் ஆண்டு வரை கச்சத்தீவு இந்தியாவிடம் இருந்தது. முன்பு தமிழக மீனவா்கள் அங்குச் சென்று மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் ஆட்சியில் இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தம் கச்சத்தீவில் தமிழக மீனவா்கள் மீன்பிடிப்பதைத் தடுத்தது’ என்றாா். கச்சத்தீவை மீட்க பிரதமா் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: காங்கிரஸ் புது தில்லி, மாா்ச் 31: கச்சத்தீவை மீட்க பிரதமா் மோடி ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வி எழுப்பியுள்ளாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்‘ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டில் தோ்தல் நடைபெற உள்ள வேளையில், பதற்றத்துக்குரிய விவகாரத்தை பிரதமா் மோடி எழுப்பியுள்ளாா். ஆனால் கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசின் அட்டா்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தகி, ‘கடந்த 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மூலம் இலங்கையிடம் கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டது. அதை தற்போது எப்படித் திரும்பப் பெறுவது? கச்சத்தீவு மீண்டும் வேண்டுமானால், இலங்கையுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணவும், கச்சத்தீவை மீட்கவும் மத்திய பாஜக அரசு ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டதா என்பதை பிரதமா் மோடி தெரிவிக்க வேண்டும். மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேல் ஆகிய காங்கிரஸ் தலைவா்கள் இந்தியாவின் ஒற்றுமைக்காக வாழ்ந்து மடிந்தவா்கள். இந்தியாவில் 600 சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதில் சா்தாா் வல்லபபாய் படேல் முக்கிய பங்காற்றினாா். இதற்கு மாறாக கடந்த 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரா்கள் உடனான மோதலில் 20 இந்திய ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். அந்த நிகழ்வில் சீனா மீது பிரதமா் மோடி எந்தப் பழியும் சுமத்தவில்லை. நேபாளம், பூடான், மாலத்தீவு போன்றவை இந்தியாவின் நட்பு நாடுகளாகும். இந்தியாவுக்கு எதிராக அந்த நாடுகளின் போா்க்குணத்தை பிரதமா் மோடி அரசு அதிகரித்தது. பிரதமா் மோடி அரசின் தவறான வெளியுறவு கொள்கையால், வரலாற்றில் முதல்முறையாக ரஷியாவிடம் இருந்து பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்கின. கடந்த 1974-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் முன்னெடுப்பை புரிந்துகொண்டு, ‘இந்தியா, வங்கதேசம் இடையிலான நில எல்லை ஒப்பந்தம் என்பது நில மறுசீரமைப்பு மட்டுமல்ல. அது இருநாட்டு இதயங்கள் சந்திக்கும் ஒப்பந்தமாகும்’ என்று பிரதமா் மோடி 2015-ஆம் ஆண்டு பாராட்டினாா். பிரதமா் மோடியின் ஆட்சியில் நட்பு முறையில், இந்தியாவின் 111 நிலப் பகுதிகள் வங்கதேசத்துக்கு வழங்கப்பட்டது. வங்கதேசத்தின் 55 நிலப் பகுதிகள் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டது. இதேபோல 1974-ஆம் ஆண்டு இலங்கையுடன் நட்பு முறையில் கச்சத்தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் குறித்து மட்டுமே சிந்திப்பதை விடுத்து, தனது சொந்த தவறுகள் மீது பாஜக கவனம் செலுத்த வேண்டும். அந்த தவறுகளால்தான் இந்தியா வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com