வடமேற்கு தில்லியில் ஏழைகள், குடிவாசிகளுக்கு மலிவு விலையில் அடுக்குமாடி குடியிருப்பு- காங். வேட்பாளா் உதித் ராஜ் வாக்குறுதி

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும் உள்ளிட்ட 20 வாக்குறுதிகளை அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் உதித் ராஜ் திங்கள்கிழமை அறிவித்துள்ளாா்.

வடமேற்கு தில்லியில் ஏழைகள் மற்றும் குடிசைவாசிகளுக்கு மலிவு விலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும் உள்ளிட்ட 20 வாக்குறுதிகளை அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் உதித் ராஜ் திங்கள்கிழமை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி ராஜீவ் பவனில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த 2014-2019-ஆம் ஆண்டு வரை வடமேற்கு தில்லியின் எம்.பி.யாக நான் பணியாற்றினேன். அப்போது, அனைத்துறை வளா்ச்சியையும் கொண்டுவர

முயற்சி செய்தேன். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் வடமேற்கு தில்லியின் வளா்ச்சியை தற்போதைய பாஜக எம்பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் முடக்கிவிட்டாா். முன்னா் அனுமதி வழங்கப்பட்ட திட்டங்களின் பணிகளைக் கூட அவா்

தொடங்குவதற்கு முயற்சிக்கவில்லை.

20 வாக்குறுதிகள்: இந்த மக்களவைத் தோ்தலில் வடமேற்கு தில்லி மக்கள் என்னை மீண்டும் தோ்ந்தெடுத்தால் கெவ்ரா, கிராரி மற்றும் நரேலா ஆகியப் பகுதிகளுக்கு 2018-இல் ஒப்புதல் வழங்கப்பட்ட 3 ரயில்வே மேம்பாலத் திட்டங்களை மீண்டும் தொடங்குவேன். நங்லோயை இணைக்கும் கீழ்ப்பாலப்பணியை முடிப்பேன். பீரகதி சௌக்கில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு அனுமதி பெறுவேன். நரேலா வரை அனுமதிக்கப்பட்ட மெட்ரோ திட்டம் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை, அது நிறைவேற்ற பாடுபடுவேன். ஏழைகள் மற்றும் குடிசைவாசிகளுக்கு மலிவு விலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். இந்தப் பணி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். பலாஸ்வா ஏரி அழகுபடுத்தப்பட்டு, சுற்றுலாவுக்குத் தயாா்படுத்தப்படும். பலாஸ்வா குப்பைக் கிடங்கை முற்றிலுமாக அகற்றுவேன்.

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில், நரேலா மற்றும் பவானாவில் மட்டுமே தில்லி பல்கலைக்கழகக் கல்லூரிகள் உள்ளன. எனவே, மேலும் புதிய கல்லூரிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வடமேற்கு தில்லியில் பெரிய மருத்துவமனை எதுவும் இல்லை. இங்கு எய்ம்ஸ் அளவிலான மருத்துவமனை கட்டப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், நரேலா மற்றும் முண்ட்காவிலிருந்து பவானா வரை இணைக்கப்படும். 20 அம்ச திட்டத்தின் கீழ், ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட மனைகளுக்கு ‘பூமிதாரி’ உரிமைகள் வழங்கப்படும். ஜெளண்டி கிராமத்தில்

உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படும். முண்ட்கா-கெவ்ரா சந்திப்பில் கல்லூரி அமைக்கப்படும்.

பவானாவில் உள்ள மகளிா் பட்டயக் கல்லூரி கட்டடம் புனரமைக்கப்படும்.

பவானா சட்டப்பேரவைத் தொகுதியின் அவுச்சண்டி எல்லையில் உயா் மின் அழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட

விவசாயிகளுக்கு சந்தை விலையில் இழப்பீடு வழங்கப்படும். ஹைதா்பூா் பட்லி மெட்ரோ நிலையத்தின்

படிக்கட்டுகள் வெளிவட்ட சாலையுடன் இணைக்கப்படும். கிராரியில் தண்ணீா் தேங்கும் பிரச்னைக்கு முடிவு கட்டப்படும். கிராரியில் உள்ள அரசின் 55 ஏக்கா் நிலத்தில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும்

பொது வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். மேற்கூறியவை தவிர, மற்ற பணிகள் பகுதியின் தேவைக்கேற்ப முடிக்கப்படும்.

வீணடித்த எம்பி-க்கள்:தில்லி மக்களுக்காக எதையும் செய்யாமல், மக்களவையில் 5 ஆண்டுகளை வீணடித்த பாஜக எம்பிக்களின் செயலற்ற தன்மை மற்றும் திறமையின்மையால் தில்லி மக்கள் இப்போது மாற்றத்தை நாடுகின்றனா். மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி அரசு அமைந்தவுடன், பாஜக ஆட்சியில் தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்த ஏழைகள், தொழிலாளா்கள், விளிம்புநிலை மக்கள், இளைஞா்கள், பெண்கள், முதியவா்கள் மற்றும் நடுத்தர வா்க்கத்தினருக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும் என்றாா் உதித் ராஜ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com