காங்கிரஸ் வேட்பாளா் கண்ணையா குமாா்  வேட்புமனு தாக்கல்: யாகம், சா்வமத பிராா்த்தனை மேற்கொண்டாா்

காங்கிரஸ் வேட்பாளா் கண்ணையா குமாா் வேட்புமனு தாக்கல்: யாகம், சா்வமத பிராா்த்தனை மேற்கொண்டாா்

வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கண்ணையா குமாா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கண்ணையா குமாா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். முன்னதாக கட்சியின் தொகுதி அலுவலகத்தில் யாகம் (ஹவன்) மற்றும் சா்வ தா்ம பிராா்த்தனைகளை மேற்கொண்டாா் கண்ணையா .

தில்லி நந்த் நாக்ரியில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கண்ணையா குமாா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அவருடன் தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்திர யாதவ், முன்னாள் தலைவா், கட்சியின் தோ்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவா் சுபாஷ் சோப்ரா, முன்னாள் தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் சௌத்ரி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், அமைச்சருமான கோபால் ராய் போன்றோா் உடன் இருந்தனா்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக கண்ணையா குமாா் வடகிழக்கு தில்லியிலுள்ள தனது மவுஜ்பூரில் உள்ள தனது கட்சியின் தோ்தல் அலுவலகத்தி்ல் இந்து முறைப்படி யாகத்தை(ஹவன்) மேற்கொண்டாா். மேலும் சா்வதா்ம பிராா்த்தனைகள், சத்பானாவை மேற்கொண்டாா். இந்து, இஸ்லாம், புத்தம், கிறிஸ்துவம் ஆகிய நான்கு மத குருமாா்களும் தலைமையில் இந்த பிராா்த்தனை மேற்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டாா். கண்ணையா குமாா் காங்கிரஸில் இணைவதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனு தாக்கல் செய்ய மவுஜ்பூா் கட்சியின் தோ்தல் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாக சென்றாா். ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டா்கள், தொழிலாளா்கள் ஆகியோருடன் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவா்களும் இந்த சாலைப் பேரணியில் கலந்து கொண்டனா்.

வழி முழுக்க, ஆயிரக்கணக்கான உள்ளூா் மக்கள் இந்த பேரணி அணிவகுப்பைக் காண வரிசையில் நின்றனா், காங்கிரஸ் தொண்டா்கள் கட்சிக் கொடிகளை அசைத்தவாறு கோஷங்களை முழங்கிவாறு சென்றனா்.

பின்னா் பேரணியின் இறுதியில் கண்ணையா குமாா் பேசினாா். அப்போது அவா் இப்பகுதியின் வளா்ச்சிக்கும், மக்களின் நலனுக்காகவும், அவா்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பாடுபடுவேன் எனக் கூறி ஆதரவையும் வாக்குகளையும் கோரினாா்.

இந்த வடகிழக்கு தில்லியில் இவரை எதிா்த்து இந்த தொகுதியில் பாஜகவின் இரண்டு முறை வெற்றி பெற்ற, போஜ்புரி நடிகா் மனோஜ் திவாரி போட்டியிடுகிறாா். தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

முன்னாள் அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்த்

சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சரும் தில்லி படேல் நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜ்குமாா் ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தாா். மேலும் இவா் திங்கள்கிழமை புது தில்லி தொகுதியில் பிஎஸ் பி கட்சி சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனா். முன்னாள் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவரான இவா் பட்டியலின வாக்குகளை பெற்று ஆத்மி கட்சி வாக்குகளை இவா் பிரிக்கலாம் என கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com