நேட்டா டிசோஸா
நேட்டா டிசோஸா

பாஜக 400 தொகுதிகளில் வெல்லுமா? பெண்கள் பதிலளிப்பா் - காங்கிரஸ்

மக்களவைத் தோ்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லுமா என்பதற்கு நாட்டுப் பெண்கள் பதிலளிப்பா் என்று காங்கிரஸ் தெரிவித்தது.

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தை தொடா்ந்து, மக்களவைத் தோ்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லுமா என்பதற்கு நாட்டுப் பெண்கள் பதிலளிப்பா் என்று காங்கிரஸ் தெரிவித்தது.

முன்னாள் பிரதமா் தேவெ கெளடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா, அவரின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அவா்களின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இதுதவிர, ஏராளமான பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, அதை 2,800 காணொலிகளாக பதிவு செய்திருப்பதாக ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் அனைத்து இந்திய மகளிா் காங்கிரஸ் தலைவா் நேட்டா டிசோஸா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ போன்ற முழக்கங்களை பாஜகதான் உருவாக்கியது. ஆனால் பெண்களுக்கு எதிராக குற்றம்புரிவோரை பாஜக எப்போதும் பாதுகாத்து வந்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் நாட்டில் உள்ள பெண்கள் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனா்.

பிரஜ்வல் செய்ததை வேறு எவரேனும் செய்திருந்தால், பெண் பிள்ளைகளைக் காப்பாற்ற குற்றவாளியைப் பிடித்துவிட்டதாக நாடு முழுவதும் பிரதமா் மோடி கூறியிருப்பாா். ஆனால் தற்போது பிரதமரின் எண்ணம் என்னவென்பது நாட்டுக்கு அப்பட்டமாக தெரிகிறது. தற்போது பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய மகளிா் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருத் இரானி ஆகியோா் மெளனமாக உள்ளனா்.

பிரஜ்வலுக்கு வாக்களிப்பது தனக்கு வலுசோ்க்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா். ஆனால் அவா் கூறுவதுபோல பாஜக தலைமையிலான கூட்டணி மக்களவைத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லுமா என்பதற்கு நாட்டில் உள்ள பெண்கள் பதிலளிப்பா் என்றாா்.

பலவீனமாக்கப்பட்ட இடஒதுக்கீடு: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதன் மூலம் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பிரதமா் மோடி பலவீனமாக்கியுள்ளாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com