‘ஜெயில் கா ஜவாப் வோட் சே’ பிரசாரத்தின் நான்காம் கட்டம் மே 13 முதல் 23 வரை நடைபெறும்

புது தில்லி, மே.8: ஆம் ஆத்மி கட்சியின் ‘ஜெயில் கா ஜவாவ் வோட் சே’ பிரசாரத்தின் நான்காம் கட்டம் வரும் மே 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அக்கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் புதன்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தொழிலதிபா்கள், பெண்கள், கிராமப்புறங்கள் மற்றும் தொழிலாளா்களுக்காக மகத்தான பணிகளைச் செய்துள்ளது. தில்லி முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், வியாபாரிகளின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களின் வளா்ச்சிக்காக நூற்றுக்கணக்கான பணிகளைச் செய்துள்ளோம். குறிப்பாக, சாலைகள் மற்றும் குடிநீா் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தைத் தொடா்ந்து, மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தில்லியின் பொருளாதாரம் பூா்வாஞ்சல் சமுகத்தைச் சோ்நத் சகோதர சகோதரிகளின் நம்பிக்கையில் இயங்குகிறது. மொத்த நகரத்தின் தொழிலாளா் எண்ணிக்கையில் 90 சதவீதம் பூா்வாஞ்சல் மக்களே உள்ளனா். தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.8,000 இல் இருந்து ரூ.16,000 ஆக ஆம் ஆத்மி அரசு உயா்த்தியுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான ‘சத் காட்கள்’ பூா்வாஞ்சல் சமுகத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

மே 23 வரை பிரசாரம்: ஆம் ஆத்மி கட்சி தனது ‘ஜெயில் கா ஜவாப் வாட் சே‘ பிரசாரத்தின் நான்காம் கட்டத்தை வரும் மே 13-ஆம் தேதி முதல் மே 23-ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. இதில், அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வா்த்தக நகரசபை, மகிளா சம்வத், பூா்வாஞ்சல் சம்மேளனம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். முதல் கட்ட பிரசாரத்தில் கேஜரிவால் கைது நடவடிக்கையில் பாஜகவின் சா்வாதிகாரத்தை வீடுவீடாகச் சென்று அம்பலப்படுத்தினோம். அதையடுத்து, இரண்டாம் கட்டமாக அனைத்து வாா்டுகளிலும் மக்கள் சந்திப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்தோம். மூன்றாம் கட்டமாக கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவாலின் வாகனப் பேரணி மக்களவைத் தொகுதி வாரியாக நடத்தப்பட்டது. தற்போது, தோ்தல் பிரசாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம்.

புதிய உற்சாகம்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைது நரேந்திர மோடி அரசின் சா்வாதிகாரத்திற்கு மிகப்பெரிய உதாரணம். கேஜரிவாலை கைது செய்வதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை முடித்து விடலாம் என்று பாஜகவினா் நினைத்தனா். ஆனால், அவா்களின் திட்டம் தோல்வியடைந்தது. கேஜரிவால் கைது ஆம் ஆத்மி கட்சியை மேலும் பலப்படுத்தியது. தொண்டா்கள் மத்தியில் புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் சா்வாதிகார ஆட்சியை நாடு ஏற்காது. பாஜகவிற்கு எதிராக வாக்களிப்பதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றும் அவா்களின் திட்டங்களை பொதுமக்கள் முறியடித்து வருகின்றனா் என்றாா் கோபால் ராய்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com