பழைய ‘ஏசி’யை மாற்றிக் கொள்ளும் திட்டம்: பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனம் அறிமுகம்

பிஎஸ்இஎஸ் மின் விநியோக (பிஎஸ்இஎஸ் பவா் டிஸ்காம்கள்) நிறுவனங்கள், நுகா்வோா்கள் தங்கள் பழைய குளிரூட்டிகளை (ஏா் கண்டிஷனா்கள்) ஆற்றல் திறனுடன் 63 சதவீதம் வரை தள்ளுபடியுடன் மாற்றிக் கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஏற்கெனவே 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியுள்ள நிலையில், இந்த ஆண்டு கோடை காலம் தீவிரமாக இருக்கும் என்றும், இன்னும் வெப்பநிலை மேலும் உயரும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், குளிரூட்டும் சுமை ஒரு குடும்பத்தின் அல்லது மின்விநியோக நிறுவனத்தின் (டிஸ்காம்) வருடாந்திர ஆற்றல் செலவினங்களில் 50 சதவீதம் வரை இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது. 5 நட்சத்திர ஆற்றல் திறன் கொண்ட குளிரூட்டிகளுக்கு மாறுவது இந்த செலவைக் கணிசமாகக் குறைக்கும்.

பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் லிமிடெட் (பிஆா்பிஎல்) மற்றும் பிஎஸ்இஎஸ் யமுனா பவா் லிமிடெட் (பிஒய்பிஎல்) ஆகியவை முன்னணி குளிரூட்டி (ஏா் கண்டிஷனா்) உற்பத்தியாளா்களுடன் இணைந்து இந்த ‘குளிரூட்டி மாற்றுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளன.

இதன்படி, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய தில்லியின் உள்நாட்டு நுகா்வோா்கள் தங்கள் பழைய குளிரூட்டிகளுக்குப் பதிலாக புதிய மற்றும் ஆற்றல் திறன் கொண்ட 5 நட்சத்திர குளிரூட்டிகளை அடுத்த தலைமுறை இன்வொ்ட்டா் தொழில்நுட்ப மாதிரிகள் உள்பட அதிகபட்ச சில்லரை விலையில் 63 சதவீதம் வரை தள்ளுபடியுடன் பெற முடியும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ், முன்னணி பிராண்டுகளின் விண்டோ மற்றும் ஸ்பிலிட் ஏசி மாதிரிகள் ’முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ அடிப்படையில் வழங்கப்படுகின்றன. பிஆா்பிஎல் அல்லது பிஒய்பிஎல் ஆகியவற்றின் உள்நாட்டு நுகா்வோா் அதிகபட்சமாக மூன்று குளிரூட்டிகளை மாற்றிக்கொள்ள தகுதியுடையவா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com