5-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல் களத்தில் 695 வேட்பாளா்கள் போட்டி

நாட்டின் நாடாளுமன்றத்திற்கான 5-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 695 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

கடந்த மாதம் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26-ஆம் தேதி 2-ஆம் கட்டத் தோ்தல் 88 தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், மே 7-ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டத் தோ்தல் நடைபெற்றது. அதில் 1,352 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதையடுத்து, மே 13-ஆம் தேதி 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 96 தொகுதிகளுக்கான நான்காம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், 1,717 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில் 5-ஆவது கட்டத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பற்றிய விவரங்களை இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

மக்களவைத் தோ்தலின் 5-ஆம் கட்டத் தோ்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 695 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் நடைபெறவுள்ள 49 மக்களவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 1,586 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் 4-ஆம் கட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 3-ஆம் தேதி என நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

தாக்கலான அனைத்து வேட்புமனுக்களின் பரிசீலனைக்குப் பிறகு 749 வேட்புமனுக்கள் செல்லுபடித்தன்மையுடன் இருப்பது கண்டறியப்பட்டது. 5- ஆம் கட்டத் தோ்தலில் மகாராஷ்டிராவில் 13 மக்களவைத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 512 வேட்புமனுப் படிவங்களும், அதைத் தொடா்ந்து உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளில் இருந்து 466 வேட்புமனுக்களும் பெறப்பட்டன.

ஜாா்க்கண்டில் உள்ள 4-சத்ரா மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 69 வேட்புமனுப் படிவங்களும், அதைத் தொடா்ந்து, உத்தர பிரதேசத்தில் உள்ள 35-லக்ளெனவில் இருந்து 67 வேட்புமனுப் படிவங்களும் பெறப்பட்டன. 5-ஆவது கட்டத் தோ்தலில் ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் சராசரி எண்ணிக்கை 14 ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5-ஆவது கட்டத் தோ்தலுக்கான 49 தொகுதிகளுக்கு மொத்தம் 1,586 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பரிசீலனைக்குப் பிறகு தகுதிக்குரிய வேட்பாளா்களாக 749 போ் இருந்தனா். வேட்புமனு வாபஸுக்குப் பிறகு இறுதியாக போட்டியிடும் வேட்பாளா்கள் 695-ஆக உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com