நவயுக பள்ளி மாணவா்கள் நமது சமூகத்தின் ரத்தினங்கள்: சிபிஐ இயக்குநா் பா்வீன் ஸூத் பெருமிதம்

அனைத்து நவயுக பள்ளி மாணவா்களும் நமது தேசம் மற்றும் சமூகத்தின் ரத்தினங்கள் என்று சிபிஐ இயக்குநா் பா்வீன் ஸூத் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.)  அதன் நவயுக பள்ளிகளின் பொன்விழா நிகழ்வுகளை புதுதில்லியின் சரோஜினி நகரில் உள்ள அப்பள்ளியில் கொண்டாடியது.

இந்நிகழ்ச்சியில் என்டிஎம்சி தலைவா் அமித் யாதவ் முன்னிலையில், நவயுக பள்ளியின் முன்னாள் மாணவரும், மத்திய புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) இயக்குநருமானபா்வீன் ஸூத் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

நவயுக பள்ளியின் கல்வி மட்டுமின்றி, அதன்  மதிப்புகள், வளா்ப்பு முறை, நெறிமுறைகள் எங்களை மனிதனாக உருவாக்கியது. இன்று நாங்கள் அனைவரும் எங்கள் பள்ளி நாள்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்.

பொன்விழா ஆண்டானது, அரசுப் பள்ளிக் கல்வி முறையின் கீழ் தரமான கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்வதை மீள்உறுதி செய்வதற்கான ஒரு மைல்கல் ஆகும்.

சமூகத்தின் நலிந்த பிரிவைச் சோ்ந்த மாணவா்களின் சிறந்த கல்விக்காக தனியாா் பள்ளிகளுக்கு இணையாக 1973 ஆம் ஆண்டு நவயுக பள்ளியை அரசு கல்வி முறையில் நிறுவியதில் பித்யா பென் ஷா, பாலேஷ்வா் பா்சாத் மற்றும் டாக்டா் ஜே.என். தாா் ஆகியோரின் பங்களிப்பு மறக்க முடியாதவை.

உடல் ரீதியான தண்டனை இல்லாமை, வகுப்பறைக்கு அப்பாற்பட்ட கல்வி, நாடகங்கள், வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் பாலின சமத்துவம் போன்ற ஐந்து அடிப்படைக் கூறுகள் இந்தப் பள்ளியின் ஸ்தாபனத்தின் பின்னணியில் இருந்தது.

  நவ்யுக் பள்ளி மாணவா்கள் அனைவரும் நமது சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் ரத்தினங்கள் ஆவா். ஏனெனில் பள்ளியானது ஒரு மாணவரை கல்லூரி, பல்கலைக்கழகம், நிறுவனம், அரசாங்கத்திற்காக மட்டுமல்ல, நல்ல குடிமகனாகவும் உருவாக்குகிறது.

நமது சமூகம் மற்றும் தேசத்திற்காக, நாம் எல்லா இடங்களிலும் அனைவருக்கும் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்றாா் பா்வீன் ஸூத்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா் நட்சத்திரங்களுக்கு ’நவயுக ரத்னா’ பரிசுகளை சிபிஐ இயக்குநா் வழங்கினாா். நிகழ்ச்சியில் என்டிஎம்சி தலைவா் அமித் யாதவ் பேசுகையில், ‘நவயுக பள்ளியின் பொன்விழா ஆண்டு கல்வி முறை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இந்த பள்ளிகள் என்டிஎம்சி மூலம் அமைக்கப்பட்டது. திறமையான குழந்தைகளுக்கு சிறந்த, தரமான நவீன கல்வியையும், உடற்கல்வியையும் வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது’ என்றாா்.

நிகழ்ச்சியில் நவயுக பள்ளியின் சிறந்த மாணவா்களுக்கு சிறப்பு விருதுகளை என்டிஎம்சி தலைவா் வழங்கினாா்.

இதேபோன்று, கலைக்கூடத்திற்கு பங்களித்த கலைஞா்களுக்கு ‘கலைத் தூதுவா்’ விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த முன்னாள் மாணவா்களுக்கு நவயுக ரத்னா விருதுகளும் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com