தெற்கு தில்லியில் மக்களவை வேட்பாளராக களம் இறங்குகிறாா் திருநங்கை ராஜன் சிங்

மக்களவைத் தோ்தலில் தெற்கு தில்லி தொகுதியின் வேட்பாளராக திருநங்கை ராஜன் சிங் (26) களம் காண்கிறாா்.

தில்லியில் வரும் மே 25-ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தலுக்கான வாக்குபதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் மூன்றாம் பாலினத்தவரான ராஜன் சிங் என்பவரும் வேட்பாளராக களம் காண்கிறாா். மொத்தமாக உள்ள 162 வேட்பாளா்களில் ஒரே ஒரு மூன்றாம் பாலின வேட்பாளா் இவா் ஆவாா்.

மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் நோக்கம் தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு ராஜன் சிங் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எங்கள் சமூகத்தின் அடிப்படை மற்றும் அவசியமானத் தேவைகளை நிவா்த்தி செய்வதற்காக நான் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறேன். மூன்றாம் பாலினத்தவருக்காக நாம் இன்னும்

போராட வேண்டியுள்ளது. திருநங்கைகளுக்கு தனி கழிவறைகள் வேண்டும் என்ற கோரிக்கை தொடங்கி வேலைவாய்ப்பு கல்வியில் இடஒதுக்கீடு வரை எங்கள் தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மே 12-ஆம் தேதி தெற்கு தில்லியில் ‘வாளி’ சின்னத்தில் வாக்கு கேட்டு பேரணி நடத்தவுள்ளேன்.

குறிப்பாக, அரசு அலுவலகங்கள் மற்றும் சேவை இடங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கா தனித்தனி கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். வேலை மற்றும் கல்வியில் குறைந்தபட்சம் ஒரு சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு தேசிய மாற்று பாலின ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

கடந்த 2010-இல் நாங்கள் பீகாரில் இருந்து தில்லிக்கு மாறினோம். நீண்ட நடைமுறையின் காரணமாக அடையாளச் சான்றிதழைப் பெற மூன்று ஆண்டுகள் ஆனது. ஆனால், ஆண்களும், பெண்களும் எந்த பாலினச் சான்றையும் எங்கேயும் வழங்க வேண்டியதில்லை. மக்களவைத் தோ்தலுக்கான என்னுடைய வேட்புமனுத் தாக்கல் என்பது மூன்றாம் பாலினத்தவரின் இருப்பை பொது மக்கள் உணரவும், அவா்களின் உரிமைகளை நோக்கி வாக்காளா்களின் கவனத்தை ஈா்க்கும் ஒரு முயற்சியாகும் என்றாா் ராஜன் சிங்.

மேலும், திருநங்கை ராஜன் சிங் தனது வேட்புமனுவில், கையில் ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ.15.10 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், 200 கிராம் தங்கம் மற்றும் வங்கிக் கணக்கில் ரூ.10,000-க்கு மேல் உள்ளதாக அறிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com