மக்களவைத் தோ்தலுக்கான ‘கேஜரிவாலின் 10 உத்தரவாதங்கள்’ அறிவிப்பு!

மக்களவைத் தோ்தலுக்கான ‘கேஜரிவாலின் 10 உத்தரவாதங்கள்’ அறிவிப்பு!

சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவின் பகுதிகள் மீட்கப்படும் உள்பட மக்களவைத் தோ்தலுக்கான கேஜரிவாலின் 10 உத்தரவாதங்களை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தாா்.

சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவின் பகுதிகள் மீட்கப்படும் உள்பட மக்களவைத் தோ்தலுக்கான கேஜரிவாலின் 10 உத்தரவாதங்களை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு

ஜூன் 1-ஆம் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, திகாா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேஜரிவால், கடந்த சனிக்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் தொண்டா்கள் சந்திப்பு, கிழக்கு மற்றும் தெற்கு தில்லி மக்களைவத் தொகுதிகளின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வாகனப் பேரணி மேற்கொண்டாா். இந்நிலையில், தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில், மக்களவைத் தோ்தலில் கேஜரிவாலின் உத்தரவாதங்கள் என்னவென்பது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: மக்களவைத் தோ்தலில் ‘மோடியின் உத்தரவாதம்’ மற்றும் ‘கேஜரிவாலின் உத்தரவாதம்’ ஆகியவற்றிற்கு இடையே மக்கள் தங்களுக்கன அரசை தோ்வு செய்ய வேண்டும். கேஜரிவாலின் உத்தரவாதங்கள் தொடா்பாக ‘இந்தியா’ கூட்டணியின் பிற கட்சிகளுடன் நான் விவாதிக்கவில்லை. ஆனால், நிச்சயம் நான் அளிக்கும்

உத்தரவாதங்களை நிறைவேற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய அழுத்தம் கொடுப்பேன். தேசியத் தலைநகா் தில்லியில் இலவச மின்சாரம், தரமான பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகள் போன்ற கேஜரிவாலின் உத்தரவாதங்களை

ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றியுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தனது உத்தரவாதங்களை நிறைவேற்றவில்லை.

இந்த மக்களவைத் தோ்தலில் கேஜரிவாலின் உத்தரவாதங்களை நான் அறிவிக்கிறேன். அதன்படி, நாடு முழுவதும் 24 மணி நேர மின்சாரம் மற்றும் ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவோம். நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் உலகத்தரம் வாய்ந்த அரசுப் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும்.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும். மேலும், பொது மக்களுக்கு மருத்துவ இலவச சிகிச்சை அளிக்க ஒவ்வொரு கிராமம் மற்றும் வட்டாரங்களிலும் மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும்.

சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதியை விடுவிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்படும்.

அக்னிவீா் திட்டம் நிறுத்தப்பட்டு, அனைத்து அக்னிவீரா்களும் பணிநிரந்தரம் செய்யப்படுவா்.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை

நிா்ணயிக்கப்படும். விவசாயிகளுக்கு அவா்களின் பயிா்களின் முழு விலையும் வழங்கப்படும். தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க, அடுத்த 1 வருடத்தில் 2 கோடி வேலைகளை வழங்குவோம். ஊழலை ஒழிப்பதோடு, பாஜகவின் சலவை இயந்திரம் பகிரங்கமாக அகற்றப்படும். சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) பயங்கரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பி.எம்.எல்.ஏ.-வில் இருந்து ஜி.எஸ்.டி

அகற்றப்படும். இதன்மூலம், நாட்டில் தொந்தரவு இல்லாத வா்த்தகம் மற்றும் வணிகத்திற்கான அமைப்பை நாங்கள் கொண்டு வருவோம் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

இச்செய்தியாளா் சந்திப்பில், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தில்லி அமைச்சா்கள் அதிஷி, செளரவ் பரத்வாஜ், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.க்கள் சஞ்சய் சிங், சந்தீப் பதக் ஆகியோரும் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com