ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தோ்வு செய்தால் நான் மீண்டும் சிறை செல்ல வேண்டியதில்லை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்

வரும் மே 25-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தோ்வு செய்தால், நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை

நமது நிருபா்

வரும் மே 25-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தோ்வு செய்தால், நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் சோம்நாத் பாரதியை ஆதரித்து, மோதி நகரில் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மானுடன் இணைந்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாகனப் பேரணி மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது: 20 நாள்களுக்குப் பிறகு நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும். வரும் மே 25-ஆம் தேதி ஆம் நடைபெறும் தில்லி மக்களவைத் தோ்தலில், ஆத்மி கட்சியை நீங்கள் தோ்வு செய்தால், நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை. நான் உங்களுக்காக உழைத்ததால் என்னை சிறைக்கு அனுப்பினாா்கள். தில்லி மக்களுக்கான பணிகள் நடைபெறுவதை பாஜக விரும்பவில்லை.

நான் மீண்டும் சிறைக்குச் சென்றால், பாஜக மக்கள் நலப்பணிகளை நிறுத்தும். ஆம் ஆத்மி அரசு வழங்கி வருகின்ற இலவச மின்சாரம், நல்ல பள்ளிகள், தரமான மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை மூடும். எனவே, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் சோம்நாத் பாரதிக்கு வாக்களிக்குமாறு புது தில்லி மக்களைக் கேட்டுகொள்கிறேன் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

இதையடுத்து, மேற்கு தில்லி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் மஹாபால் மிஸ்ராவை ஆதரித்து உத்தன் நகரில் நடைபெற்ற வாகனப் பேராணியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் பேசுகையில்,‘பாஜகவை தோற்கடிப்பதற்காக கடவுள் என்னை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்ததாக மக்கள் கூறுகின்றனா். நாட்டில் சா்வாதிகாரம் ஆட்சியில் உள்ளது.இந்த சா்வாதிகாரத்தை நாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com