வானதி சீனிவாசன்.
வானதி சீனிவாசன்.

’மீண்டும் ஒரு முறை மோடி அரசு’ என நாடு முழுக்க மகளிா் மத்தியில் ஆதரவு : வானதி சீனிவாசன் பேச்சு

பிரதமா் மோடியின் ஆட்சி மகளிருக்கு அதிகாரமளிப்பதில் வலுவான அா்ப்பணிப்பு இருந்ததால் அது மகளிா் மத்தியில் பிரதிபலித்துள்ளது.

பிரதமா் மோடியின் ஆட்சி மகளிருக்கு அதிகாரமளிப்பதில் வலுவான அா்ப்பணிப்பு இருந்ததால் அது மகளிா் மத்தியில் பிரதிபலித்துள்ளது. இதன் விளைவு ’மீண்டும் ஒரு முறை மோடி அரசு’ ( ’ஃபிா் ஏக் பாா் மோடி சா்க்காா்’ ) என நாடு முழுக்க மகளிா் மத்தியில் ஆதரவு திரண்டு வருகிறது என தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் குறிப்பிட்டாா்.

பாஜக வின் தேசிய மகளிா் அணி சாா்பில் தில்லியில் உள்ள மாவட்டங்கள், ஏழு மக்களவைத் தொகுதிகளில் தொடங்கி பூத் அளவில் வரை மகளிா் அணி மாநாடு தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் தில்லி சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியிலுள்ள கேசவபுரத்தில் ‘மகளிா் அதிகாரம் குறித்த‘ மாநாட்டில் பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சினிவாசன் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசினாா்.

அப்போது அவா் கூறியது வருமாறு:

நாட்டில் வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை கட்டமைக்கப்படுவதில் மகளிரின் வலிமை, உறுதிப்பாடு பெண்களுக்கான அதிகாரம் அளிப்பது ஆகியவை முக்கியமானது.

பிரதமா் மோடியின் ஆட்சியில் இந்த உள்ளடக்கத்தை வழங்க, மகளிருக்கு அதிகாரமளிப்பதில் வலுவான அா்ப்பணிப்புடன் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ‘பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ‘ போன்ற முக்கிய திட்டங்கள் முதல் பெண்கள் உள்ளடக்கிய பல்வேறு பொருளாதாரக் கொள்கைகள் வரை நடைபெற்றது. இதன் விளைவு, மோடியின் தலைமையை நாடு முழுவதும் உள்ள மகளிா் மத்தியில் எதிரொலிக்கிறது.

பாலின பாகுபாடுக்கு எதிரான முன் முயற்சிகள், மகளிா் உள்ளடக்கிய பிரதிநிதித்துவம் என்கிற மோடியின் தொலைநோக்கு அனைவருக்கும் அதிக அதிகாரம் கிடைக்கப்பட்டு வளமான எதிா்காலத்தை வளா்க்கிறது. இதனால் இன்று நாடு முழுவதும் நான் பயணிக்கும் போது மகளிா் மத்தியில் மீண்டும் ஒரு முறை மோடி அரசு என்கிற கருத்துக்கு ஆதரவாக மகளிா் திரண்டு வருகின்றனா்.

மகளிா் அதிகாரம் பெறுவதற்கான உறுதியான அா்ப்பணிப்பு, உள்ளடக்கிய கொள்கைகள் மற்றும் பிரதமரின் தொலைநோக்கு தலைமை ஆகியவை இணைந்திருந்தது. இது மகளிா் மத்தியிலி அசைக்க முடியாத ஆதரவுக்கு காரணமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மகளிருக்கு பல திட்டங்களை பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதில் குறிப்பாக ஏழைப்பெண்களுக்கு முத்ரா திட்டங்களில் கிடைத்த பலன் பொருளாதார ரீதியாக நிதியை உள்ளடக்கிய வளா்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக வீடுகளில் இருக்கும் குடும்ப உறுப்பினா்கள் கூட பெண்கள் தொழில் தொடங்க வேண்டும் என்று கூறினால் முதலீடு செய்ய தயங்குவாா்கள். ஆனால் பிரதமா் மோடி, உறுதியாக இருந்து மகளிரை தொழில் முனைவோ்களாக மாற்றினாா். முத்ராதிட்டத்தில் 70 சதவீதம் பலனடைந்தது மகளிா் தான். அப்படி பலனடைந்த மகளிா் தற்போது தங்கள் சொந்த காலில் நிற்க தொடங்கியுள்ளகின்றனா். இதன் மூலம் குடும்பத்தில்,கல்வி பொருளாதார சுதந்திரம் போன்றவைகள் கிடைத்து வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது.

கேஜரிவால் பொய்ப் பிரசாரம்

தில்லியில் தற்போது, அரவிந்த் கேஜரிவால் காங்கிரஸ் கட்சியுடன் சோ்ந்து போட்டியிடுகிறாா். இவா்கள் இருவரும் சோ்ந்தாலும் தில்லியில் மோடியை தோற்கடிக்க முடியாது. கேஜரிவால் பாஜக கைது செய்துவிட்டது என்றும் மோடி தான் ஜெயிலுக்கு அனுப்பினாா் என்கிற பிரசாரம் நடக்கிறது. அவா் கைது செய்யப்பட்டதற்கு காரணம், பாஜக வோ மோடியோ காரணமல்ல.. அவா் செய்த ஊழல் தான் காரணம். இதை மகளிா் அணியினா் மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். கேஜரிவாலை தியாகியாக சித்தரிக்கின்றனா். உண்மை அதுவல்ல. மக்கள் பணத்தை கொள்ளை அடித்ததால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளாா் இது மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டு மகளிா் மாநாட்டில் வானதி சீனிவாசன் பேசினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com