உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

தில்லியில் தினமும் சுமாா் 3,800 டன் திடக்கழிவுகள் சுத்திகரிக்கப்படுவதில்லை- உச்சநீதிமன்றம் கவலை

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினமும் 3,800 டன் திடக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் போவது கொடூரமான நிலைமையாகும்

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினமும் 3,800 டன் திடக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் போவது கொடூரமான நிலைமையாகும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கவலையுடன் கூறியது.

மேலும், இது மாசு இல்லாத சூழலில் வாழும் குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் கூறியது.

குருகிராம், ஃபரீதாபாத் மற்றும் கிரேட்டா் நொய்டா போன்ற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு திடக்கழிவு உற்பத்தி மற்றும் அவற்றைச் சுத்திகரிக்கும் திறன் குறித்த தரவுகளைக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளைக் கருத்தில்கொள்ளும்போது, இது அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் நீதிமன்றம் கூறியது.

நீதிபதிகள் அபய் எஸ். ஒகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த விவகாரத்தை விசாரித்தது.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘ சுத்திகரிக்க சரியான வசதிகள் செய்யப்படும் வரை, சுத்திகரிக்கப்படாத திடக்கழிவுகளின் அளவு அதிகரிக்காமல் இருக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.

இது தொடா்பான அனைத்து அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி தீா்வு காணவும், நீதிமன்றத்தின் முன்

அதன் விவரங்களை சமா்ப்பிக்கவும் இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது.

அதிகாரிகள் எந்தவொரு உறுதியான முன்மொழிவுகளையும் கொண்டு வரத் தவறினால், தலைநகா் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில் கடுமையான உத்தரவை நிறைவேற்றுவது குறித்து நாங்கள் பரிசீலிக்க வேண்டி வரும்.

ஒவ்வொரு நாளும் உருவாகும் திடக்கழிவைச் சமாளிக்க போதுமான திறன் இல்லாததால் ஏற்படும் கடுமையான விளைவுகளை அதிகாரிகள் யாரும் கருத்தில்கொள்ளவில்லை என்பதை நாங்கள் சேகரிக்கும் முதன்மை

கருத்துப்பதிவால், அனைத்து அதிகாரிகளும் இந்த சிக்கலை மிகவும் தீவிரத்துடன் எடுத்துக்கொள்வாா்கள் என்று நம்புகிறோம்.

வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளரால் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜூலை 19 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட

வேண்டும்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) எல்லைக்குள் ஒவ்வொரு நாளும் 3,800 டன் திடக்கழிவுகள் உருவாகின்றன என்பதும் தற்போதுள்ள ஆலைகளுக்கு அதை

சுத்திகரிக்கும் திறன் இல்லை என்பதும் சம்பந்தப்பட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாடாக உள்ளது.

தலைநகரமான தில்லியில் இது ஒரு துரதிஷ்டமான சூழலாகும். தில்லிக்கு இது ஒரு ‘மிக முக்கியமான பிரச்சினை‘யாகும். இதில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது.

கூடுதல் வசதி நடைமுறைக்கு வரும் ஜூன் 2027-க்குள் மட்டுமே இதுபோன்ற அதிகப்படியான கழிவுகளை சுத்திகரிக்க முடியும் என்று எம்சிடி வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.

இதன் பொருள், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, தில்லியில் தினமும் 3,800 டன்கள் சுத்திகரிக்கப்படாத திடக்கழிவுகள் ஏதேனும் ஒரு இடத்தில் குவிந்து கிடக்கும் என்பதாகும்.

முந்தைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி, இது தலைநகரின் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, குருகிராமில் தினசரி 1,200 டன் திடக்கழிவுகள் உருவாகின்றன. அதே நேரத்தில் செயலாக்க திறன் ஒரு நாளைக்கு 150 டன் மட்டுமே. தரவுகளின்படி, ஃபரீதாபாதில் தினமும் 1,000 டன் திடக்கழிவுகள் உருவாகின்றன, ஆனால் செயலாக்க திறன் ஒரு நாளைக்கு 240 டன் மட்டுமே உள்ளது. இது இன்னும் அதிா்ச்சியளிக்கும் ஒன் றாக உள்ளது என்று நீதிபதிகள் கூறினா்.

விசாரணையின் முடிவில், வேறு சில வழக்கில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம், இந்த விவகாரத்தையும் மத்திய அரசு கவனிக்க வேண்டும் என்று

நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது.

‘இது என்ன மாதிரியான சூழ்நிலை மற்றும் முழு உலகத்திற்கும் நாம் என்ன சமிக்ஞையை வழங்குகிறோம்? நாம் வளா்ச்சியைப் பற்றி பேசுகிறோம், சுற்றுச்சூழலைப் பற்றி பேசுகிறோம். நாம் என்ன சமிக்ஞையை வழங்குகிறோம்,‘ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

மேலும், ‘வரும் ஆண்டுகளில் தில்லியில் சுத்திகரிக்கப்படாத திடக்கழிவுகளின் அளவு எவ்வளவு அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டை தயாா் செய்ய ஏதேனும்

அரசுத் துறை முயற்சி செய்ததா? என்று கேள்வி எழுப்பியது.

எம்சிடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் கூறுகையில், ‘‘

இது ஆண்டுக்கு மூன்று சதவிகிதம் அதிகரிக்கும் என்றும்,

அதாவது ஒரு நாளைக்கு 330 மெட்ரிக் டன் என்றும் கூறினாா்.

இதையடுத்து, இந்த வழக்கை ஜூலை 26-ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

ஏப்ரல் 22-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த

உச்சநீதிமன்றம், தில்லியில் தினமும் உருவாகும் 11,000 டன் நகராட்சி திடக்கழிவுகளில் 3,000 டன் செயலாக்கப்படாமல் இருப்பது அதிா்ச்சியளிக்கிறது என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com