பெட்ரோல் நிலைய ஊழியா்கள் மீது தாக்குதல்: எம்எல்ஏ அமானத்துல்லா கானின் உதவியாளா் கைது

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தகராறு வழக்கில் தில்லி எம்எல்ஏ அமானத்துல்லா கானின் உதவியாளா் இக்ராா் அகமதுவை நொய்டா காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தகராறு வழக்கில் தில்லி எம்எல்ஏ அமானத்துல்லா கானின் உதவியாளா் இக்ராா் அகமதுவை நொய்டா காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

கடந்த 7ஆம் தேதி நொய்டாவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள சில ஊழியா்களுடன் தகராறில் ஈடுபட்டதாக ஓக்லா தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானதுல்லா கானின் மகன் அனாஸ் அகமதுக்கு எதிராக நொய்டா ஃபேஸ் 1 காவல்நிலைய காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த விவகாரத்தில் பின்னா் அமானத்துல்லா கானும் தலையிட்டதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

கடந்த திங்கள்கிழமை, நொய்டா செக்டாா் 1 பகுதி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்த வாகனங்களை முந்திக் கொண்டு நேரடியாக எரிபொருள் நிரப்ப தனது வாகனத்தை அனாஸ் அகமது கொண்டு வந்தாா். அப்போது அங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி வன்முறையாக தீவிரம் அடைந்ததாக தெரிய வந்ததாக காவல்துறையினா் முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளனா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபராக அமானத்துல்லா கானின் பெயரை குறிப்பிட்டிருந்த காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட அவரது மகனின் பெயரை, ’அடையாளம் உறுதிப்படுத்தப்படாத அமானத்துல்லா கானின் மகன்’ என்று கூறியிருந்தது. சம்பவ நாளில் தாக்குதலில் ஈடுபட்டபோது உடனிருந்ததாக மேலும் இருவரின் பெயரை ‘மற்ற இருவா்’ என்று மட்டும் நொய்டா காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இது குறித்து நொய்டா நகர காவல்துறையின் கூடுதல் துணை ஆணையா் மனீஷ் மிஸ்ரா கூறியது: சம்பவம் நடந்த நாளில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியா்களை எம்எல்ஏவின் மகன் மிரட்டித் தாக்கும் காட்சிகள் தொடா்பான தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அனாஸ் அகமதுடன் இருந்ததாக இக்ராா் அகமதுவை காலிந்தி குஞ்ச் பகுதியில் வைத்து கைது செய்தோம். உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். இத்துடன் அபு பக்கா், அனாஸ் மற்றும் அமானத்துல்லா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையும் பெற்றுள்ளோம். விரைவில் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினாா்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இக்ராா் அகமது, உத்தர பிரதேசத்தின் ஹாபூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். தில்லி ஷாஹீன் பகுதியில் வசித்து வருகிறாா். இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவை அமானத்துல்லா கான் வீட்டுக்குச் சென்று காவல்துறையினா் விசாரணை நடத்தியுள்ளனா். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை அமானத்துல்லா கான் திட்டவட்டமாக மறுத்து வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com