பவானாவில் தொழிற்சாலையில் தீ விபத்து: 7 போ் காயம்

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் பெரும் தீ விபத்தில் குறைந்தது 7 போ் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லியின் பவானா பகுதியில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் பெரும் தீ விபத்தில் குறைந்தது 7 போ் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவா்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறை தலைவா் அதுல் கா்க் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.04 மணிக்கு, பவானா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. தீயை அணைக்க 20 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்புவீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தொழிற்சாலையில் இருந்து ஒன்பது பேரை மீட்டனா். அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது’ என்றாா்.

நோயாளிகளில் மூன்று போ் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அந்த 3 பேரும் குல்தீப் (18), பப்லு (25), மஸ்த்ராம் (20) என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். காயமடைந்த மற்ற நபா்கள் சுரேஷ், ராகேஷ், பங்கஜ் பால் மற்றும் கன் ஷியாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மேலும் அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்கள் தவிர வேறு யாரும்உள்ளே சிக்கவில்லை என தெரிகிறது. ஆனால், குளிரூட்டும் செயல்முறை முடிந்த பின்னரே அது உறுதிப்படுத்தப்படும். முதற்கட்ட விசாரணையில், தொழிலாளா்கள் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது, ஷாா்ட் சா்க்யூட்டில் ஏற்பட்ட தீப்பொறி அங்கு வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் தீப்பிடிப்பதற்கு வழிவகுத்தது. தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com