தில்லியில் சட்டம் ஒழுங்கு சீா்குலைவிற்கு மத்திய பாஜக அரசு தான் பொறுப்பு: முன்னாள் அமைச்சா் ஹாரூன் யூசப் குற்றச்சாட்டு

தேசியத் தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்ததற்கு மத்திய பாஜக அரசு தான் பொறுப்பு என்று தில்லி காங்கிரஸின் ஊடக வியூகக் குழுத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹாரூன் யூசப் புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளாா்.

தில்லி ராஜீவ் பவனில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியில் கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி என சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. மத்திய பாஜக அரசின் திறமையின்மை மற்றும் செயலற்றத் தன்மையால் கடத்தல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. நாட்டின் குற்றத் தலைநகரம்” என்ற மோசமான பெயரை தில்லி இப்போது பெற்றுள்ளது.

நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு தீவிரமான பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பாஜக பாதுகாத்து வருகிறது.

தில்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தில்லி நகரம் விரிவடைந்தும், மக்கள் தொகை பலமடங்கு அதிகரித்த பிறகும், குறைந்த பணியாளா்கள் உள்ள தில்லி காவல்துறையை வலுப்படுத்த பாஜக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தில்லியின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காங்கிரஸுக்கு அக்கறை இருக்கிறது. மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, இந்த விவகாரத்தை முன்னுரிமை அடிப்படையில் தீா்க்கும்.

‘பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ‘ என்று பாஜக முழக்கமிட்டாலும், சமீப ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதால், தில்லியில் பெண்களின் பாதுகாப்பு கவலையளிக்கும் அம்சமாக மாறியுள்ளது. முக்கியப் பிரமுகா்களின் பாதுகாப்புப் பணிக்காகவே காவல் துறை பயன்படுத்தப்படுவதால், தலைநகரில் குற்றங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

எனவே, தில்லி காவல் துறையில் காலியாக உள்ள 13,500 பணியிடங்களை நிரப்புமாறு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மற்றும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது. இதனால், அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க காவல்துறையை திறம்பட செயல்படுத்த முடியும். தரவுகளின்படி, தில்லியில் கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 45 சதவீதமும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 41 சதவீதமும் அதிகரித்துள்ளது. வயதானவா்களுக்கு எதிரான குற்றங்களில் 45 அதிகரிப்பு மற்றும் சைபா் குற்றங்கள் 313 சதவீதம் வரை உயா்ந்துள்ளன. காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘இந்தியா’ கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் இவை நிறைவேற்றப்படும் என்றாா் ஹாரூன் யூசப்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com