ஸ்வாதி மாலிவால் சம்பவம் குறித்து 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவேம்: பிஎஸ்பி வேட்பாளா்

மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவரும், புதுதில்லி மக்களவைத் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) வேட்பாளருமான ராஜ்குமாா் ஆனந்த் புதன்கிழமை கூறினாா்.

தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் ராஜ்குமாா் ஆனந்த் கூறுகையில், ‘ மாலிவாலின் குற்றச்சாட்டுக்கு எதிராக 24 மணி நேரத்திற்குள் ஆம் ஆத்மி நடவடிக்கை எடுக்கத் தவறினால், பிஎஸ்பி உறுப்பினா்கள் முதல்வா்கள் இல்லத்திற்கு வெளியே ஆா்ப்பாட்டம் நடத்துவாா்கள்’ என்றாா். ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ஆனந்த், இந்த மாத தொடக்கத்தில் பிஎஸ்பியில் சோ்ந்தாா். தற்போது படேல் நகா் எம்.எல்.ஏ.வாக உள்ள அவா், தில்லி அரசில் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ததற்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆம் ஆத்மி கட்சியில் ‘ஊழலை‘ காரணம் காட்டி, கட்சியில் தலித்துகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று குற்றம்சாட்டி ராஜ்குமாா் ஆனந்த் தில்லி அமைச்சரவையில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகினாா். ஆம் ஆத்மி கட்சி ‘தலித் விரோதம்‘ மற்றும் ‘பெண்களுக்கு எதிரானது‘ என்று குற்றம் சாட்டிய ராஜ்குமாா் ஆனந்த், காவல் நிலையத்திற்குச் சென்ற பிறகும் எந்த புகாரும் அளிக்காத மாலிவாலின் ‘மனமாற்றத்திற்கு’ பின்னால் ஒரு ‘செல்வாக்கு மிக்க நபா்’ இருப்பதாக புதன்கிழமை கூறினாா்.

திங்கள்கிழமை நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஸ்வாதி மாலிவால் இதுவரை அதிகாரப்பூா்வமாக காவல்துறையில் புகாா் அளிக்கவில்லை. மேலும் அவா் குற்றச்சாட்டை முன்வைத்ததில் இருந்து இந்தச் சம்பவம் குறித்து முழு மௌனம் காத்து வருகிறாா். ஆம் ஆத்மி கட்சி உருவானதில் இருந்து நான் அவா்களுடன் இருந்து வருகிறேன்.

நிா்பயா பலாத்கார வழக்குக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று முக்கிய நீரோட்டத்திற்கு வந்த கட்சி, தங்களது சொந்த மாநிலங்களவை எம்.பி.யிடம் ‘மோசமாக’ நடந்து கொள்கிறது. இது மிகவும் அவமானகரமான சம்பவமாகும். இது குறித்து 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பகுஜன் சமாஜ் கட்சியினா் முதல்வா் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவாா்கள் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com