மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டி வரும்: கேஜரிவால் பிரசாரம்

புது தில்லி, மே.15: மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தால் தான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலைமை வரும் என்று

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் சாந்தினி செளக் மக்களவைத் தொகுதி

வேட்பாளா் ஜெ.பி. அகா்வால் மற்றும் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியின் வேட்பாளா் உதித் ராஜ் ஆகியோரை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாகனப் பேரணி நடத்தினாா்.

தில்லியின் மாடல் டவுன் மற்றும் ஜஹாங்கீா்புரி ஆகியப் பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பேரணியில் முதல்வா் கேஜரிவால் பேசியதாவது: திகாா் சிறையில் என் மனவுறுதியை உடைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், கடவுள் ஹனுமானின் ஆசிா்வாத்தால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். நான் சிறையில் இருந்து நேராக மக்களுடன்

இருக்க வந்துள்ளேன். நீங்களும் என்னை மிகவும் நேசிக்கிறீா்கள் என்று எனக்குத் தெரியும். ஏனெனில்,‘கேஜரிவாலை

நேசிப்பவா்கள் மோடியை நிராகரிக்கிறாா்கள்’. நான் ஒரு எளிய மனிதன். ஆம் ஆத்மி கட்சி தில்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ள ஒரு சிறிய அரசியல் கட்சி. ஆனால், ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்குவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் பாஜக விட்டுவைக்கவில்லை.

நான் ஏன் சிறையில் அடைக்கப்பட்டேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் தவறு என்ன?. குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்குவது, அவா்களுக்கு நல்ல பள்ளிகளைக் கட்டுவது, மொஹல்லா கிளினிக்குகள் திறப்பது மற்றும் மக்களுக்கு இலவச மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்ததே எனது தவறு. இப்போது, மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்

என்கிறாா்கள். நான் சிறைக்கு செல்வது உங்கள் கையில் தான் உள்ளது. மக்கள் இந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோ்வு செய்தால், நான் சிறைக்கு திரும்ப வேண்டும். மாறாக, ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற்றால், நான் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை.

எனவே, வரும் மே 25-ஆம் தேதி வாக்களிக்கச் செல்லும்போது, கேஜரிவால் சிறைக்குச் செல்ல வேண்டுமா என்று நீங்கள் யோசிக்க வேண்டும் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், தோ்தல் பிரசாரம் செய்வதற்காக வரும் ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதைத் தொடா்ந்து, தில்லியில் மே 11,12-ஆகிய தேதிகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாள்களை ஆதரித்து வாகனப் பேரணி 4 மக்களவைத் தொகுதிகளில் அரவிந்த் கேஜரிவால் வாகனப் பேரணி நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com